திருப்பரங்குன்றம்: மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளுக்கான தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டதாக கூறி, எய்ம்ஸ் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் படங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக அப்போது மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில், ‘தற்போது நடைபெற்று வரும் அனைத்து நடவடிக்கைகளும், கட்டமைக்கப்பட்ட நெறிமுறைகளின்படி நடத்தப்படும். கட்டுமானத்திற்கு முந்தைய செயல்பாடுகள் என்ன என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். தமிழக அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததும் முக்கிய கட்டுமானப் பணிகள் தொடங்கும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சூழலில் கடந்த 2ம் தேதி கட்டுமானம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை, எய்ம்ஸ் நிர்வாகம் தரப்பில் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நிபுணர் குழு, எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதன்படி ஓரிரு நாளில் தமிழ்நாடு அரசு முறைப்படி அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை எய்ம்ஸில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட வேண்டும். வெடி விபத்திற்கான உயர் தீக்காய சிகிச்சை மையம் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்க வேண்டுமென்ற பரிந்துரைகளும் நிபுணர் குழு தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.
The post எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி: நிபுணர் குழு பரிந்துரை appeared first on Dinakaran.