×

இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூ.10 கோடி தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது

ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட ரூ.10.03 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர். இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கடல் வழியாக தமிழ்நாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்படி அதிகாரிகள் குழு ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து சோதனையிட்டுள்ளனர். அந்த நபர் 6 பாக்கெட்களில் மறைத்து வைத்திருந்த 5.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சிவகங்கை மாவட்ட பகுதியில் ஒரு வாகனத்தில் சென்ற இருவர் மற்றும் அவர்களிடம் இருந்து தங்கத்தை வாங்க வந்த இருவர் என 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது வாகனத்தில் வந்த இருவரிடம் 7 பாக்கெட்களில் இருந்த 8 கிலோ அளவிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து புதுக்கோட்டை வழியாக கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிந்ததும், இவர்களை மதுரையிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட 13.952 கிலோ தங்கத்தின் மதிப்பு ரூ.10.03 கோடியாகும்.

The post இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூ.10 கோடி தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Ramanathapuram ,Revenue Intelligence Department ,Tamil Nadu ,Pudukottai district ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...