- எடப்பாடி
- எக்மோர் நீதிமன்றம்
- தயானிதி மாறன்
- சென்னை
- எடப்பாடி பழனிசாமி
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- திமுக
- தயாநிதி மாறன்
- தின மலர்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை ஜூன் 27ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் அதிமுக சார்பில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பேசும்போது, நம்முடைய கூட்டணி கட்சி வேட்பாளரை எதிர்த்து நிற்கிற திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியில் கிட்டத்தட்ட 75 சதவீத நிதியை செலவே செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
உண்மைத் தன்மையை ஆராயாமல் எடப்பாடி பேசிய இந்த பேச்சு உண்மைக்குப் புறம்பானது, மக்கள் மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். எந்த ஆதாரங்களும் இல்லாமல் என்மீது அவதூறு பரப்பியுள்ளார். பொதுமக்களுக்கு சேவை செய்வதையே முழுநேர பணியாக கொண்டு செயல்படும் என்மீது தொகுதி மக்களிடமும், தமிழக மக்களிடமும் உள்ள நற்பெயரை கெடுக்கும் வகையில் எடப்பாடி பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உள்ள நற்பெயருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் நான் தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் பயன்படுத்தவில்லை என்று அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து 24 மணி நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று தெரிவித்திருந்தேன். 24 மணி நேரமாகியும் அவர் மன்னிப்பு கேட்காததால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கினை பதிவு செய்திருக்கிறேன். மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி நிதியில் சுமார் ரூ. 17 கோடியில் ரூ. 17 லட்சம் தான் மீதம் உள்ளது. நான் 95 சதவீதத்திற்கு மேல் என் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழித்துள்ளேன். 17 கோடி ரூபாய் என் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டது.
அதைக் கொண்டு என் தொகுதிக்கு பல நலத்திட்டங்களை செய்துள்ளேன். எனவே, அவதூறு பரப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500ன் கீழ் அவதூறு நடவடிக்கை எடுத்து அவரை தண்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் எம்.தர்மபிரபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் ஐயப்ப ராஜ், ரியாஸ் அகமது ஆகியோர் ஆஜராகினர். அப்போது நீதிபதி, இந்த வழக்கு எம்.பி, எம்எல்ஏ சம்பந்தமானது. அதனால் வழக்கை எம்பி எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிடுகிறேன், வழக்கு விசாரணையை ஜூன் 27ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று கூறினார்.
The post தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி நேரில் ஆஜர்: எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம் appeared first on Dinakaran.