சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள 19ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ளது. இந்தப் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ஆன்லைன் வாயிலான விண்ணப்பப் பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற இருக்கிறது.
விண்ணப்பப் பதிவு செய்தவர்கள் தங்களுடைய ஆன்லைன் வழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள நாளை (வியாழக்கிழமை) முதல் 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பித்து தேர்வுக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ள முடியும் எனவும், திருத்தங்களை மேற்கொண்ட பின், அதனை உறுதிசெய்ய வேண்டும் எனவும், அவ்வாறு உறுதி செய்யாவிட்டால் விண்ணப்பம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும், திருத்தங்களை மேற்கொண்டு சமர்ப்பித்தபின், எந்த மாற்றமும் செய்ய முடியாது எனவும் தேர்வு வாரியம் தெரிவித்து இருக்கிறது.
The post உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வரும் 19ம் தேதி வரை கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.