×

தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடுகிறார் வாரணாசியில் மோடி வேட்புமனு தாக்கல்: 3 மாநில முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

வாரணாசி: மக்களவை தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் 3 மாநில முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக உடனிருந்தனர். கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி அமோக வெற்றி பெற்று முதல் முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து 2019ம் ஆண்டிலும் வாரணாசியில் வெற்றி பெற்று பிரதமரானார்.

தற்போது 3வது முறையாக அவர் மீண்டும் வாரணாசியிலேயே களமிறங்கி உள்ளார். வாரணாசியில் வரும் ஜூன் 1ம் தேதி, இறுதிகட்டமாக நடக்கும் 7ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய நேற்று முன்தினம் வாரணாசி வந்தார். வாக்காளர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில், முக்கிய சாலைகள் வழியாக சுமார் 6 கிமீ சாலைப் பேரணி மேற்கொண்டார். அவருடன் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேரணியில் கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து, நேற்று காலை தசாஷ்வமேத் ஆற்றங்கரைக்கு வந்த பிரதமர் மோடி கங்கைக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டார். அங்கிருந்து பிரசித்தி பெற்ற கால பைரவர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அதைத் தொடர்ந்து, வாரணாசி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பிரதமர் மோடி, அங்கு தனது வேட்புமனுவுக்கு பரிந்துரைத்த பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி, பைஜ்நாத் படேல், லால்சந்த் குஷ்வாஹா, சஞ்சய் சோன்கர் ஆகியோருடனும், முதல்வர் யோகி ஆதித்யநாத்துடனும் உள்ளே சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமரின் வேட்புமனுவுக்கு பரிந்துரைத்தவர்களான கணேஷ்வர் சாஸ்திரி, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நல்ல நேரம் குறித்து கொடுத்தவர். பைஜ்நாத் படேல் நீண்ட கால ஆர்எஸ்எஸ் நிர்வாகி. சோன்கர் வாரணாசி பாஜ பிரிவின் பொதுச் செயலாளர்.

வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வந்த பிரதமர் மோடியுடன், கூட்டணி பலத்தை காட்டும் வகையில், பாஜ தலைவர் ஜேபி நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஹர்தீப் சிங் பூரி, அனுப்ரியா படேல் மற்றும் ராம்தாஸ் அத்வாலே, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, என்சிபி கட்சித் தலைவர் பிரபுல் படேல், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜன சேனா தலைவர் பவன் கல்யாண், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா-மதச்சார்பற்ற கட்சி நிறுவனர் ஜிதன் ராம் மஞ்சி, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா தலைவர் உபேந்திர குஷ்வாஹா, உத்தரப் பிரதேச அமைச்சரும் நிஷாத் கட்சித் தலைவருமான சஞ்சய் நிஷாத், சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சித் தலைவர் ஓம்பிரகாஷ் ராஜ்பர், ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி, லோக்ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ், பி.டி.ஜே.எஸ். தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி, அசோம் ஞான பரிஷத் தலைவர் அதுல் போரா உள்ளிட்டோர் உடன் இணைந்தனர்.

அப்போது அவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ‘‘ஒன்றிய பாஜ அரசின் திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், கடந்த மக்களவை தேர்தலைவிட ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தது 370 வாக்குகளை பாஜ அதிகமாக பெறுவதை உறுதி செய்ய வேண்டும்’’ என வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து தனது டிவிட்டர் பதிவில், ‘‘வாரணாசி தொகுதி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். வரலாற்று சிறப்புமிக்க இந்த தொகுதியில் மக்களுக்கு சேவை செய்வது பெருமையாக உள்ளது. மக்களின் ஆசியுடன் இது நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த சாதனைகள் வரவிருக்கும் காலங்களில் இன்னும் வேகமாக தொடரும். இன்று காசியில் எங்களின் மதிப்புமிக்க கூட்டணிக் கட்சிகளுடன் இருப்பதில் பெருமை அடைகிறேன். எங்கள் கூட்டணி, தேசிய முன்னேற்றம் மற்றும் நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. வரும் ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக நாங்கள் ஒன்றிணைந்து பாடுபடுவோம்’’ என மோடி குறிப்பிட்டுள்ளார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கட்சியின் உபி மாநில தலைவர் அஜய் ராய் மற்றும் பகுஜன் சமாஜ் சார்பில் அதர் ஜமால் லாரி போட்டியிடுகின்றனர்.

* தமிழரிடம் வேட்புமனு அளித்த மோடி
வாரணாசியில் கலெக்டராக பணியாற்றிவரும் எஸ்.ராஜலிங்கம் தமிழர் ஆவார். 2009ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (என்ஐடி) வேதிப்பொறியில் பட்டம் பெற்ற இவர், குஷிநகர், சுல்தான்பூர் கலெக்டராகவும் இருந்துள்ளார். கடந்த 2006ல் முதல் முறையாக குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற ராஜலிங்கம் உபி மாநில ஐபிஎஸ் அதிகாரியானார். காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மோடியிடம் தனிப்பட்ட செல்வாக்கு பெற்றவர் இவர். இந்நிலையில், வாரணாசி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான ராஜலிங்கத்திடம் பிரதமர் மோடி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் மோடியின் வேட்புமனுவை பெற்றுக் கொண்டு உறுதிமொழி வாசிக்கச் சொன்னார். அதன்படி கலெக்டர் முன்பாக எழுந்து நின்று பிரதமர் மோடி உறுதிமொழி வாசித்தார். உபி உள்ளிட்ட வடமாநிலங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் என குடிமைப்பணி அதிகாரிகளாக சுமார் 40 தமிழர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

* சொந்த வீடு, கார் இல்லை வங்கியில் ரூ.2.85 கோடி டெபாசிட்
வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பிரதமர் மோடி தனது சொத்து விவரங்களை பிரமாண பத்திரத்தில் தந்துள்ளார். அதில், மொத்தம் ரூ.3.02 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சொந்தமாக நிலம், வீடு, கார் இல்லை என கூறி உள்ளார். 2018-19ல் ரூ.11 லட்சத்து 14 ஆயிரத்து 230 ஆக இருந்த தனது வருமானம் 2022-23ல் ரூ.23 லட்சத்து 56 ஆயிரத்து 80 ஆக 2 மடங்காக உயர்ந்துள்ளதாக கூறி உள்ளார். கையில் ரொக்கமாக ரூ.52,920 வைத்திருக்கிறார். பாரத ஸ்டேட் வங்கியில் 2 கணக்குகள் உள்ளன. எஸ்பிஐ காந்திநகர் கிளையில் ரூ.73,304 டெபாசிட் செய்யப்பட்டுள்ள நிலையில், வாரணாசி கிளையில் ரூ.7,000 மட்டுமே உள்ளது. இதுதவிர, ரூ.2 கோடியே 85 லட்சத்து 60 ஆயிரத்து 338க்கு நிலையான வைப்புத் தொகையாக டெபாசிட் செய்துள்ளார். மோடியிடம் ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 750 மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள் உள்ளன. தன் மீது குற்ற வழக்குகள், வரி பாக்கி எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ள மோடி தன்னை சார்ந்து குடும்பத்தில் யாருமில்லை எனவும், தனது மனைவி யசோதா பென்னின் சொத்து விவரங்கள் குறித்து எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்து- முஸ்லிம் என நான் அரசியல்
செய்ய வில்லை: மோடி திடீர் அறிவிப்பு
இந்துக்களின் சொத்துக்களை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள். ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் வழங்கும் என்று பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். இந்த வெறுப்பு பிரசாரம் குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி அளித்த பதிலில், இந்து-முஸ்லிம் என நான் அரசியல் செய்வதில்லை. அப்படி, செய்யும் நாளில், நான் பொது வாழ்க்கைக்கு தகுதியானவனாக இருக்க மாட்டேன். நான் இந்து-முஸ்லிம் என்று கூறி அரசியல் செய்ய மாட்டேன். இது என் உறுதிமொழி” என்றார்.

* மோடியை புறக்கணித்தாரா நிதிஷ்?
பிரதமர் மோடி நேற்று மனுத்தாக்கல் செய்த போது அனைத்து கூட்டணி தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வரவில்லை. அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மோடியை நிதிஷ் புறக்கணித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதுபற்றி ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும், பீகார் முன்னாள் துணைமுதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: நிதிஷ்குமார் ஆசிர்வாதம் என்னுடன் இருப்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் நான் அவருடைய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறேன். முக்கியமாக கவனிக்கவும், பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்த நாளிலேயே அவர் நோய்வாய்ப்பட்டார். அவருடைய முழு ஆதரவையும் நான் பெறுகிறேன் என்பது தெளிவாகிறது’ என்றார்.

The post தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடுகிறார் வாரணாசியில் மோடி வேட்புமனு தாக்கல்: 3 மாநில முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Varanasi ,Uttar Pradesh ,Lok Sabha ,
× RELATED மதுரவாயிலில் கல்லூரி பேராசிரியர்...