×

அக்னியாக வாட்டிய வெப்பத்தின் நடுவே கொட்டியது மழை, குளிர்ந்தது கோவை

கோவை: கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது. கோவை மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் துவக்கம் வரை கடுமையான வெயில் காணப்பட்டது. இந்த தொடர் வெயிலின் தாக்கத்தின் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். தவிர, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் மழை பெய்யவில்லை. இரவு நேரங்களிலும் உஷ்ணம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் முதல் மாவட்டத்தில் கோடை மழை பெய்ய துவங்கியது. இதையடுத்து, கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

ஒரு சில இடங்களில் மதியத்திற்கு மேல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. பகல் நேரத்திலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அதன்படி, துடியலூர், கவுண்டம்பாளையம், வடகோவை, காந்திபுரம், பீளமேடு, உக்கடம், சிங்காநல்லூர், ராமநாதபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை முதல் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், உக்கடம், பீளமேடு, காந்திபுரம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. காற்றில் ஈரபதம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால், மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காலநிலை நிலவியது. கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு வந்த பொதுமக்கள் கோடை மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தவிர, கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் 228 மி.மீ மழை பதிவாகி உள்ளது. பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): அன்னூர் 2.40, மேட்டுப்பாளையம் 3, சின்கோனா 6, சின்னகல்லார் 19, வால்பாறை 37, வால்பாறை தாலுகா 35, சோலையார் 18, ஆழியார் 3.60, கோவை தெற்கு 1, பீளமேடு 16.50, வேளாண் பல்கலைக்கழகம் 6, பெரியநாயக்கன்பாளையம் 27.40, பில்லூர் அணை 20, வாரப்பட்டி 9, தொண்டாமுத்தூர் 7, மாக்கினாம்பட்டி 16, ஆனைமலை 2 என மொத்தம் 228.90மி.மீ மழை பதிவாகியுள்ளது.

The post அக்னியாக வாட்டிய வெப்பத்தின் நடுவே கொட்டியது மழை, குளிர்ந்தது கோவை appeared first on Dinakaran.

Tags : Goa ,
× RELATED கோடை விடுமுறை நிறைவடையும் தருவாயில்...