×

வஉசி பூங்கா புள்ளி மான்கள் சிறுவாணி வனத்தில் விடுவிப்பு: கண்காணிக்க வனத்துறை குழு

கோவை: கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 26 புள்ளி மான்கள் சிறுவாணி பகுதியில் உள்ள வனத்தில் நேற்று விடுவிக்கப்பட்டன. கோவை வஉசி உயிரியல் பூங்கா 1965-ம் ஆண்டு 4.35 ஏக்கர் பரப்பில் துவங்கப்பட்டது. இந்த பூங்கா மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இங்கு பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன உள்பட சுமார் 400-க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் இருந்தன. இந்த பூங்காவிற்கு மத்திய வன உயிரின மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உரிமம் வழங்கப்பட்டு இருந்தது. பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு ஏற்ப கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய வன உயிரின மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியது. இதில், ஏற்பட்ட காலதாமதம் காரணமாக போதிய இடவசதி இல்லை என கூறி மத்திய வன உயிரின மேம்பாட்டு ஆணையம் கடந்த 2022-ம் ஆண்டு கோவை வஉசி உயிரியல் பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது.

இதனை தொடர்ந்து அதில் பராமரிக்கப்படும் அட்டவணை வன உயிரினங்களை வனப்பகுதியில் விடுவித்திட, முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி, கோவை வஉசி உயிரியல் பூங்காவில் இருக்கும் அட்டவணை வன உயிரினங்களை மாற்றம் செய்ய தமிழக வனத்துறையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வஉசி பூங்காவில் பராமரிக்கப்படும் புள்ளி மான்களை மாற்றம் செய்திட அதன் புழுக்கைகளை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு புள்ளி மான்களுக்கு காசநோய் தொற்றும் எதுவும் இல்லை என்று அறிக்கை பெறப்பட்டது. பின்னர், மார்ச் மாதம் முதல் மான்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடர் தீவனங்கள் நிறுத்தப்பட்டு கூடுதலாக பச்சை தீவனங்கள் மற்றும் சிறுவாணி மலை அடிவார பகுதிகளில் மான்கள் உண்ணும் தாவர வகைகளை மான்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து மான்களை வனப்பகுதிக்கு மாற்றம் செய்ய கோவை மாநகராட்சி மினி லாரி வாகனத்தில் வனத்துறை மூலம் கூண்டு கட்டமைக்கப்பட்டது.

பின்னர், ஆனைமலை புலிகள் காப்பகம் வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் ராமசுப்பிரமணியன், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் போலுவம்பட்டி வன பணியாளர்கள், கோவை வனமண்டல வன கால்நடை அலுவலர் கோவை வஉசி வன உயிரியல் பூங்கா இயக்குனர், வனத்துறை அலுவலர்கள் மற்றும் கோவை மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் 10 ஆண் புள்ளி மான், 11 பெண் புள்ளிமான், 6 குட்டி மான்கள் என மொத்தம் 26 புள்ளி மான்கள் கூண்டு அமைக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டன. பின்னர் சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் சராகம் வனப்பகுதிக்கு அந்த மான்கள் கொண்டு செல்லப்பட்டு நேற்று விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட புள்ளி மான்கள் தீவன உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் மற்றும் அதன் ஆரோக்கியத்தினை தொடர்ந்து கண்காணிக்க வனத்துறையின் சார்பில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் சார்பில் தெரிவித்தனர்.

The post வஉசி பூங்கா புள்ளி மான்கள் சிறுவாணி வனத்தில் விடுவிப்பு: கண்காணிக்க வனத்துறை குழு appeared first on Dinakaran.

Tags : Vausi ,Park ,Siruvani Forest ,Coimbatore ,Vausi Zoo ,Vausi Park ,Dinakaran ,
× RELATED அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி