×

இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்.. விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!!

டெல்லி : இந்தியாவில் எல்டிடிஈ எனப்படும் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஒன்றிய அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”இந்தியா முழுவதும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தங்களுக்கான ஆதரவை திரட்டி வருகின்றன. எல்டிடிஈ அமைப்பின் செயல்பாடுகள் இந்தியாவின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதால் இந்தத் தடை நீட்டிக்கப்படுது.எல்டிடியி-ன் பிரிவினைவாத நடவடிக்கைகள் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் எல்டிடிஈ அமைப்பு சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தடை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையானது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட 1991-ம் ஆண்டுக்குப் பிறகு அமலுக்கு வந்தது. 2009-ம் ஆண்டு இலங்கையில் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றதாகவும், இயக்கத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.

எனினும் விடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கம் மூலமாக இந்தியாவின் ஆதரவைத் திரட்ட இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் முயல்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவைப் பெற முயற்சிக்கப்படுகிறது. இத்தகைய முயற்சியானது இந்தியாவின் ஒருமைப்பாட்டை குலைக்கும் செயலாகும். இதனாலேயே இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

The post இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்.. விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Liberation Tigers ,Delhi ,EU government ,LTDE ,India ,Union Ministry of Interior ,Dinakaran ,
× RELATED தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு