டெல்லி : பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடைகோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் மதம், கடவுளின் பெயரால் மோடி வாக்கு சேகரிப்பதால் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என கோரி பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் பாத்திமா என்பவர் வழக்கறிஞர் ஆனந்த் எஸ்.ஜோந்தலே மூலம் தாக்கல் செய்த மனுவில், பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையின் போது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், மதரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும், “என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.சி.சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, “நீங்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிடாமல் உச்சநீதிமன்றத்தில் ஏன் நேரடியாக முறையீட்டீர்கள்.இதற்கு அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை என்பதால் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. ஆகவே மனுவை திரும்பப் பெற வேண்டும்,” என்று தெரிவித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட மனுதாரர் தேர்தல் ஆணையத்தில் முறையிட இருப்பதாக கூறி மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார். இதையடுத்து வழக்கு திரும்பப் பெறப்பட்டதாகக் கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் எஸ். ஜோந்தலே தாக்கல் செய்த இதேபோன்ற மனுவை விசாரிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
The post பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!! appeared first on Dinakaran.