சென்னை : மோட்டார் வாகனங்கள் தொடர்ந்து தீ பற்றி எரிவது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளில் மோட்டார் வாகனங்கள் தானாக தீப்பிடித்து சேதம் அடைந்து வருகின்றன. இது குறித்து சாலை மற்றும் போக்குவரத்து ஆணையரகம் ஆய்வு மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG அல்லது LPG மாற்றங்கள் செய்யக் கூடாது என்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்வது குற்றம் என்றும் போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீ பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்விபத்துக்கள் பற்றி ஆய்வு செய்கையில் மோட்டார் வாகனங்களில் மாறுதல் செய்யப்படுகையில் அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள், அதற்கான அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகிறது. வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகனச் சட்டம் (மற்றும்) விதிகளின்படி குற்றமாகும். எனவே, வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செய்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG அல்லது LPG மாற்றங்கள் செய்யக் கூடாது : போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.