*நட்டாலம் அருகே பரபரப்பு
மார்த்தாண்டம் : நட்டாலம் அருகே சொந்த நிலத்தில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் சடலத்துடன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பன்றிகோடு மஹாதேவர் பக்தர்கள் சங்க அறக்கட்டளைக்கு சொந்தமான ஆனைபாறை பகுதியில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை ஒருவர் கடந்த வியாழக்கிழமை இடித்ததாக அறக்கட்டளை நிர்வாகிகள் மார்தாண்டம் போலீஸ் நிலையம் மற்றும் எஸ்பியிடம் புகார் அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் 15 தினங்களில் இடித்த சுடுகாட்டை கட்டி கொடுப்பேன் என இடித்தவர் போலீஸ் நிலையத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் ஆசாரி மனைவி அம்முகுட்டி(80) என்பவர் உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலை அந்த சுடுகாடோடு சேர்ந்து உள்ள அவர்களது சொந்த நிலத்தில் தகனம் செய்ய எடுத்து வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த பகுதியில் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அம்முகுட்டியின் உறவினர்களும், பொது மக்களும் ஆனைபாறை பேக்கிவிளை பகுதியில் மூதாட்டி உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் சுடுகாடு செல்லும் பாதையை ஆக்ரமித்து வைத்திருப்பதாகவும், உடனே அதை கையகப்படுத்த வேண்டும், சொந்த நிலத்தில் தகனம் செய்ய விடாமல் தடுப்பவர் மீது நடவடிகை எடுக்க வேண்டும். பொது சுடுகாட்டை இடித்தவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். 5 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடந்தது. அவர்களிடம் மார்த்தாண்டம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் இரவு வரை போராட்டம் நீடித்தது.
The post சொந்த நிலத்தில் தகனம் செய்ய எதிர்ப்பு மூதாட்டி உடலுடன் சாலை மறியல் appeared first on Dinakaran.