*திருப்புவனத்தில் தயாராகிறது
திருப்புவனம் : அழகர் கோவில் 18ம்படி கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக திருப்புவனத்தில் 18 அடி நீளம், 200 கிலோ எடை கொண்ட ராட்சத அரிவாள் தயாரிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, திருப்புவனம் பகுதிகளில் நேர்த்திக்கடனுக்காக ராட்சத அரிவாள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி, மாரநாடு கருப்புசாமி, சோணை சாமி போன்ற பல்வேறு காவல் தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்களின் ஆர்டரின் பேரில் அரிவாள்கள் தயாரிக்கப்படுகிறது. ஒரு அடி முதல் 21 அடி நீளம் வரை அரிவாள்கள் தயாரிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 5 அரிவாள்கள் வரை தயாரிக்கின்றனர்.
திருப்புவனத்தில் தற்போது 12 அரிவாள் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இங்குள்ள கார்த்தி லெட்சுமணன் என்பவருக்கு சொந்தமான பட்டறையில் பக்தர் ஒருவரின் ஆர்டரின்பேரில் அழகர்கோவில் 18ம் படி கருப்பண்ணசாமிக்காக 18 அடி நீளத்தில் சுமார் 200 கிலோ எடை கொண்ட ராட்சத அரிவாள் தயாராகி உள்ளது.
பட்டறை உரிமையாளர் கார்த்தி லெட்சுமணன் கூறுகையில், “இந்த அரிவாளின் விலை ரூ.35 ஆயிரம். அரிவாள் தயாரிப்பு செலவு மற்றும் மூலப்பொருள்கள் மதிப்பு மட்டும் ரூ.25 ஆயிரம் பிடிக்கிறது. தயாரிப்புக் கூலியாக ரூ.10 ஆயிரம் பெறுகிறோம். கருப்பண்ணசாமிக்காக நேர்த்திக்கடன் அரிவாள் தயாரிப்பது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார். இந்த ராட்சத அரிவாளை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
The post அழகர்கோவில் 18ம்படி கருப்பண்ணசாமிக்காக 200 கிலோ எடை, 18 அடி நீள ராட்சத நேர்த்திக்கடன் அரிவாள் appeared first on Dinakaran.