×

கோடைகாலம் முடிவதற்குள், ஏரி குளங்களையும், வாய்கால்களையும் தூர்வார வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: கோடைகாலம் முடிவதற்குள், ஏரி குளங்களையும், வாய்கால்களையும் தூர்வார வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கோடைகாலம் முடிவதற்குள், ஏரி குளங்களையும், வாய்கால்களையும் தூர்வார வெண்டும். மேலும் மழைநீர் வடிகால் பணிகளையும் சாலைகளையும் ஒருகாலக் கெடுவுக்குள் செப்பணிட வேண்டும். தமிழக தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது. 13-ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை பரவலாக மழை இருக்கும் என்று சென்னை வானிலை நிலையம் அறிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் குறிப்பாக தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது. கடுமையான கோடை வெயிலுக்கு பிறகு இடையில் நான்கு, ஐந்து நாட்களாக பல மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் சாலைகளில் தேங்கி பல இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது எச்சரிக்கையை அளித்த போதும் பல்வேறு இடங்களில் அறுவடை செய்து விற்பனைக்கு வந்த நெல்மணிகளும் கொள்முதல் செய்த நெல்மணிகளும் உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து வீணாகியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டியில் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதம் அடைந்துள்ளது. அவர்களின் பாதிப்புகளை கண்டறிந்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கடைமடைகளுக்கு எளிதாக செல்லும் வகையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். அதோடு கோடை காலங்களில் ஏரி, குளங்களையும் தூர்வாரி தண்ணீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கை அளிக்கும் மழை தண்ணீரை சேமிக்கும் திட்டம் கர்மவீரர் காமராஜர் ஆட்சிக்குப்பிறகு எந்த ஆட்சியாளரும் செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இனிமேலும் காலதாமதம் செய்யாமல் கோடைகாலம் முடிவதற்குள் மழைநீர் வடிகால் பணியையும், போக்குவரத்து சாலைகளை செப்பணிட்டும், இப்பணிகளை ஒருகாலக் கெடுவுக்குள் முடித்து மக்கள் பயடைய உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கோடைகாலம் முடிவதற்குள், ஏரி குளங்களையும், வாய்கால்களையும் தூர்வார வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,CHENNAI ,Tamil State Congress ,President ,Dinakaran ,
× RELATED நியாய விலை கடைகளின் மூலம்...