*உணவு பாதுகாப்புத்துறை ஆய்வுக்கு கோரிக்கை
வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கோடையில் போலி மின ரல்வாட்டர் கேன்கள் சீல் இன்றி விற்பனை செய்வதாகவும், குழாய் நீர் கலப்பதாகவும புகார் எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கோடையில் போலி மினரல் வாட்டர் கேன்கள் அதிகரித்துள்ளது. சீல் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. குழாய் நீர் கலந்து விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கிணற்று நீர், ஆற்று நீர், ஊற்று நீர் குடித்த காலம் மாறி தற்போது குக்கிராமங்கள் வரையில் மினரல் வாட்டர் கேன்களில் விற்பனை செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. ஆரம்பகாலத்தில் இந்த சுத்திகரிப்பு சரியான முறையில் இருந்து வந்த நிலையில், மக்கள் மினரல்வாட்டர் கேன்கள் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டதால், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் அதிகரித்துவிட்டது. அதேசமயம் இதில் போலி மினரல் வாட்டர் கேன்கள் விற்பனையும் அதிகரித்துவிட்டது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் தற்போது கோடையில் 25 லிட்டர் அளவுள்ள போலி மினரல் வாட்டர் கேன்கள் அதிக அளவில் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.
பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட வாட்டர் கேன்கள் மாற்றப்படாமல் பாசிபடர்ந்த கேன்கள், சுத்திகரிக்கப்படாத குடிநீர், அந்த கேன்களில் சீல், தேதி என்று எந்தவிதமான குறியீடுகளும் இல்லாமல், விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதில் ஒரு சிலர் தெருக்குழாய்களில் இருந்து குடிநீர் பிடித்து அதனை அப்படியே ஒரு கேன் ₹30 வரைக்கும் விற்பனை செய்கின்றன.
எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் போலி மினரல் வாட்டர் கேன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைவாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
The post வேலூர் மாவட்டத்தில் சீல் இன்றி விற்பனை, குழாய் நீர் கலப்பதாக புகார் கோடையில் அதிகரித்துள்ள போலி மினரல்வாட்டர் கேன்கள் appeared first on Dinakaran.