×

பொள்ளாச்சியில் கன மழை வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதம் துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து சில மாதமாக மழை இல்லாமல் இருந்தது, கடந்த மாதம் இறுதியில் கோடை மழை பொய்த்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் மாலை நேரத்தில் சில மணி நேரம் கோடை மழை பெய்தது. அதன் பின் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாலை நேரத்தில் அவ்வப்போது சாரலுடன் மழை பெய்துள்ளது.

இதில் நேற்று மதியம் முதலே மழை பெய்யத் துவங்கியது. பொள்ளாச்சி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ரோடுகளில் தண்ணீர் ஆறாக ஓடியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட்டனர். அதுமட்டுமின்றி பொள்ளாச்சியில் நந்தனார் காலனி, தன்னாட்சியப்பன் கோவில் வீதி உள்ளிட்ட சில இடங்களில் தாழ்வான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து தன்னாட்சி அப்பன் கோவில் வீதி உள்ளிட்ட சில இடங்களில் வீடுகளில் புகுந்த தண்ணீரை அப்புறப்படுத்தும் பனியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பலர் தண்ணீர் புகுந்த வீடுகளை பார்வையிட்டதுடன் மோட்டார் மூலம் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கன மழைக்கு ரோட்டோரம் இருந்த சில மரங்களில் இருந்து கிளைகள் முறிந்து விழுந்தன. வெங்கடேச காலனியில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு உண்டானது. பொள்ளாச்சி பகுதியில் நேற்று சில மணி நேரம் தொடர்ந்து கன மழையாக கோடை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post பொள்ளாச்சியில் கன மழை வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Anaimalai ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில்...