×
Saravana Stores

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி முன்னிலையில் மாசாணியம்மன் கோயிலில் தங்கம் அளவீடு செய்யும் பணி துவங்கியது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி முன்னிலையில், பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில், இந்து சமய அறநிலையத்துறை 2021-2022 மானிய கோரிக்கையின் போது , அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்களில், கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய பொன் இனங்களை மும்பையில் உள்ள அரசுக்குச் சொந்தமான தங்க உருக்கு ஆலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என அறிவித்தார்.

இப்பணிகளுக்காக இந்து சமய அறநிலையதுறை சார்பில், தமிழ்நாடு 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.இதில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை, மாசாணியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகவும் வரப்பெற்ற மொத்தம் 32 கிலோ 663 கிராம் தங்க நகைகள், கோயில் உபயோகத்திற்கு தேவையில்லாத கல், அரக்கு, அழுக்கு போன்றவற்றை நீக்கி நிகர தங்கங்களை தரம் பிரித்து எடை போடும் பணி நேற்று, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமிராஜு தலைமையில், கோயில் அலுவலக வளாகத்தில். நடைபெற்றது.

கோவை, இணை ஆணையர் ரமேஷ், துணை ஆணையர் (சரிபார்ப்பு) விஜயலட்சுமி, அறங்காவலர் குழுத் தலைவர். முரளிகிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள், தங்கமணி, திருமுருகன், திருமதி, மஞ்சுளாதேவி, மருதமுத்து. ஆய்வாளர் சித்ரா, கோவை வைர நுண்ணறிஞர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அரசு ஆணை கிடைத்தவுடன், தங்கங்கள் அனைத்தும் பாரத ஸ்டேட் வங்கி மூலம், மும்பை அரசு உருக்காலைக்கு கொண்டு சென்று உருக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதற்கான தங்க பத்திரங்களை ரிசர்வ் வங்கி கோயிலுக்கு வழங்கும். இதிலிருந்து கிடைக்கும் வட்டி, கோயில் வருவாயில் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கம் எடை போடும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி முன்னிலையில் மாசாணியம்மன் கோயிலில் தங்கம் அளவீடு செய்யும் பணி துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Masaniyamman ,Pollachi ,Anaimalai Masaniyamman ,Tamil Nadu Legislative Assembly ,Hindu Religious Charities Department ,
× RELATED நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய...