×
Saravana Stores

குழந்தை திருமணங்களை தடுக்க ஆய்வு கூட்டம்

*கலெக்டர் தலைமையில் நடந்தது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி தங்கதுரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது, உடனடியாக போக்சோ வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையிருனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அரசிடம் இருந்து உரிய நிவாரணம் பெற்றுத்தர, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்குழந்தைகள் தொடர்ந்து கல்வி பயிலுவதை உறுதி செய்யவும், தொடர்ந்து மாவட்ட சமூகநல அலுவலர் கண்காணிக்க வேண்டும்.

மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதை, மாவட்ட எஸ்பி, டிஎஸ்பி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நல குழுமம், மாவட்ட சமூக நல அலுவலர், போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குழுவை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

தொடர்ந்து, மாவட்ட எஸ்பி தங்கதுரை பேசுகையில், ‘குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, உரிய நடவடிக்கை மேற்கொள்வதை காவல் அலுவலர்களால் உறுதி செய்யப்படும்,’ என்றார். போக்சோ மற்றும் குழந்தை திருமணங்களில், காவல் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய பல்வேறு நடைமுறைகள் குறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், மாவட்ட சமூகநல அலுவலர், குழந்தைகள் நல குழும உறுப்பினர்கள், டிஎஸ்பிக்கள், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.

The post குழந்தை திருமணங்களை தடுக்க ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Collector Krishnagiri ,Social Security Department ,District Child Protection Unit ,Krishnagiri District Collector ,Dinakaran ,
× RELATED மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் 2...