×
Saravana Stores

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வரும் 19ம் தேதி தொடங்க வாய்ப்பு :கொளுத்தும் வெயிலுக்கு நடுவே வானிலை மையம் “ஜில்” அறிவிப்பு!!

டெல்லி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வரும் 19ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மழை பொழிவைத் தரும் காலங்கள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ காலம்தான். இதில், தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். தென்மேற்குப் பருவ மழையால் இந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதிகள் பயன் பெறுகின்றன. தென் மேற்கு பருவமழை இயல்பாகவே மே 22ம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு சற்று முன்கூட்டியே வரும் 19ம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று வெளியிட்டுள்ள வானிலை முன்கணிப்பு அறிக்கையில், தென் மேற்கு பருவமழை மே 19ம் தேதிக்குள் தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அளவு கோள்களின் அடிப்படையில் கேரளாவில் வழக்கத்தை விட சற்று முன்னதாகவே மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாதகமான கடல் வளிமண்டல காரணிகளால் ஜூன் -செப்டம்பர் இடையே இயல்புக்கு மேல் மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவக் காலத்தில் குறைந்த அளவு மழையை மட்டுமே பெறும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்கள் மட்டுமே தென்மேற்குப் பருவ மழையால் கணிசமான மழை பெறுகிறது.இதனிடையே கடந்த ஆண்டு அரபிக் கடலில் நிலவிய காற்று சுழற்சி காரணமாக பருவமழை தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

The post தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வரும் 19ம் தேதி தொடங்க வாய்ப்பு :கொளுத்தும் வெயிலுக்கு நடுவே வானிலை மையம் “ஜில்” அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Weather ,Delhi ,Indian Meteorological Centre ,India ,Center ,
× RELATED அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த...