திருவாரூர், மே 14: திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காற்று திசை வேக மாறுபாடு காரணமாக வரும் 16ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பாக வட மாவட்டங்களில் உள் மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் தினந்தோறும் கடும் வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
திருவாரூரில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டமாக இருந்து வந்தது. இந்நிலையில் பகல் சுமார் மணியளவில் திடீரென வானம் இருண்டு திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அடியக்கமங்கலம், விளமல், சேந்தமங்கலம், புலிவலம் உள்ளிட்ட பகுதிகளிலும் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட கமலாபுரம் பாரதி மூலங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் அரை மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய திடீர் கன மழை பெய்தது. இந்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கனமழையின் காரணமாக நெல் மற்றும் பருத்தி சாகுபடி பணிகளில் ஈடுபட்ட விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். தற்போது பெய்து வரும் இந்த கனமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post கோடை நெல்லும் விளைஞ்சிருச்சு திடீரென இடியுடன் கூடிய கனமழை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் appeared first on Dinakaran.