×
Saravana Stores

ராமநாதபுரம் பகுதியில் கடை வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ராமநாதபுரம், மே 14: ராமநாதபுரம் ஒரு பாராளுமன்ற தொகுதி, 4 சட்டமன்ற தொகுதி, 11 யூனியன்கள், 429 கிராம பஞ்சாயத்துகள், 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் என உள்ளடக்கி மாவட்டத்தின் தலைநகராக உள்ளது.

அனைத்து துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட நீதிமன்றங்கள், எஸ்.பி உள்ளிட்ட காவல்துறை தலைமை அலுவலகங்கள், உயர் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவ கல்லூரி தலைமையிட மருத்துவமனை உள்ளிட்ட மாநில அரசுகள், ஒன்றிய அரசுகளின் தலைமை அலுவலகங்கள், வணிகம், கல்வி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாதலங்கள், ரயில், பஸ் போக்குவரத்திற்கான மையப்பகுதியாகவும் ராமநாதபுரம் உள்ளது.

இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதியினர் மட்டுமின்றி பல்வேறு வெளிமாவட்டம் முதல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து யாத்திரீகர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்லும் நகரமாக ராமநாதபுரம் திகழ்கிறது.இதுபோன்று ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் அரண்மனை வீதி, மணி கூண்டு, மருத்துவக் கல்லூரி சாலை, வண்டிக்காரத் தெரு, பூ மார்க்கெட், கேணிக்கரை, ஓம்சக்தி நகர் செல்லும் வழி, புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி, அண்ணா சிலை பகுதிகள் முக்கிய வர்த்தக பகுதியாக இருப்பதால் பெட்டிக்கடை, டீக்கடைகள் முதல் நகைகடை, துணிக்கடைகள், சூப்பர் மார்க்கெட் என பெரிய வணிக வளாகங்கள் வரை உள்ளது.

இதனால் பொதுமக்கள், வாகனங்கள் நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.இங்குள்ள முக்கிய வீதிகளில் நடை பாதையில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைகள், பொது ஆக்கிரமிப்புகள் மற்றும் பெரும்பாலான கடைகளின் முன்பு அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் நகராட்சி மற்றும் வருவாய் துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.அதன்பேரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆக்கிரமிப்புகளை தாங்களவே அகற்றிக் கொள்ள வியாபாரிகளுக்கு முறையாக அறிவிப்பு செய்யப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று ராமநாதபுரத்தில் முக்கிய கடை வீதிகளில் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதனால் தற்போது சாலைகளில் இடையூறு குறைந்துள்ளது.

The post ராமநாதபுரம் பகுதியில் கடை வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,
× RELATED பரமக்குடி அருகே ரயில் பிரேக் ஷூ கழன்று வந்து தாக்கியதில் விவசாயி பலி