காரியாபட்டி, மே 14: கம்பிக்குடி கிராமத்தில் 10 ஏக்கர் நெற்பயிரை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். காரியாபட்டி ஒன்றியம் கம்பிக்குடி கிராமத்தில் ஒரு சில விவசாயிகள் கோடையில் நெற் பயிர்கள் பயிரிட்டனர். தற்போது இப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்த நெற் பயிர்கள் அறுவடை செய்யும் தயார் நிலையில் இருந்தது.
இங்கு நேற்று முன்தினம் இரவு நுழைந்த 50க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் நிலத்தில் உள்ள நெற் பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. இதனால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த நெற்கதிர்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து இப்பகுதி விவசாயி முருகேசன் கூறுகையில், கோடை காலத்தில் கிணற்று தண்ணீரை வைத்து விவசாயம் செய்து வருகிறோம். இந்த ஆண்டு கோடை காலத்தில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் பயிர் பயிரிட்டோம். இன்னும் 2-3 தினங்களில் அறுவடை செய்யும் தருவாயில் இருந்த நெற்பயிரை பன்றிகள் சேதப்படுத்திவிட்டன.
ஒரு ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டை நெல் விளைச்சல் கிடைக்கும் தருவாயில் பன்றிகளால் சேதமடைந்ததால் நாங்கள் மிகவும் மனவேதனையில் உள்ளோம். விவசாயம் மற்றும் வனத்துறையினர் பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
The post கம்பிக்குடி கிராமத்தில் 10 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.