- ஆந்திரா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு
- ஆந்திரப் பிரதேசம்
- மதுரை
- காரனோடை சுங்க வீடு
- திருவள்ளூர் மாவட்டம்
சென்னை: ஆந்திராவில் இருந்து, சென்னை வழியாக மதுரைக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக கடந்த 2019 செப்டம்பர் 19ம் தேதி தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம் காரனோடை சுங்கச்சாவடி அருகே அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த ‘டொயோட்டா ஃபார்ச்சூனர்’ வாகனத்தில் இருந்து இறங்கிய நபர், அருகில் ஆரஞ்ச் நிற வெஸ்பா டூவீலரில் இருந்த நபரிடம் பார்சல்களை வழங்க முயற்சித்தார். இதைப் பார்த்த அதிகாரிகள் இரு வாகனங்களையும் தடுத்து நிறுத்தி அதில் சோதனையிட்டனர். அப்போது, காரில் இருந்த பைகளில், மொத்தம் 303.3 கிலோ எடையுள்ள கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்க, பி.ரமேஷ் என்பவர் நிதியுதவி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரில் வந்த மதுரை மாவட்டம் செல்லுாரை சேர்ந்த மனோகரன் (33), தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த எம்.விஜயகுமரன் (45), உத்தமபாளையத்தை சேர்ந்த டி.சந்திரன் (39), சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த எல்.ரவி (57), மதுரை கே.புதுார் பகுதியை சேர்ந்த பி.ரமேஷ் (52) ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை காலத்தில் சந்திரன் உயிரிழந்ததால், அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது. மீதமுள்ள நான்கு பேர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள், சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் மனோகரன், விஜயகுமரன், ரவி, ரமேஷ் ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தம் ₹10 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
The post ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு 303 கிலோ கஞ்சா கடத்திய 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை appeared first on Dinakaran.