- ஜெயகுமார்
- நெல்லை
- தென் மண்டலம்
- நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ்
- ஜனாதிபதி
- ஜெயக்குமார் தன்சிங்
- ஜெயக்குமார்
நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரணம் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் முடிவு தெரிய வரும், என தென் மண்டல ஐஜி கண்ணன் நெல்லையில் தெரிவித்தார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்ஜெயக்குமார் தன்சிங் மரணம் தொடர்பாக கடந்த 10 நாட்களாகியும் மர்மம் நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை குறித்து நெல்லை எஸ்பி அலுவலகத்தில் தென் மண்டல ஐஜி கண்ணன் அளித்த பேட்டி:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங் கடந்த 2ம் தேதி மாயமானார். அவரது குடும்பத்தினர் 3ம் தேதி உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் ஆள் மாயம் என வழக்குப்பதிந்து தேடினர். 4ம் தேதி திசையன்விளை அருகே கரைசுத்துபுதூரிலுள்ள அவரது வீட்டருகே தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங் உடல் பாதியளவு தீயில் கருகி கண்டெடுக்கப்பட்டது.
15 முதல் 50 சென்டி மீட்டர் அளவு கொண்ட கடப்பா கல் கம்பியுடன் சுற்றி அவரது உடலுடன் சேர்த்து கட்டப்பட்டிருந்தது. அவரது வாயில் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஸ்கிரப் திணிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் மாயமான வழக்கு சந்தேக மரணம் என மாற்றப்பட்டது. அவரது வீட்டு வளாகத்தில நிறுத்தியிருந்த காரில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். தொடர்ந்து அவரது அலுவலகத்தில் நடத்திய சோதனையில் மரண வாக்குமூலம் என அவர் நெல்லை மாவட்ட எஸ்பிக்கு எழுதிய கடிதங்கள் சிக்கியது. இதில் தனக்கு பணம் வரவு, செலவு தொடர்பாகவும், அரசியல் ரீதியாகவும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதற்காக குடும்பத்தினர், உறவினர்கள் யாரும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எழுதப்பட்டிருந்தது.
மேலும் தனக்கு மரணம் ஏற்பட்டால் இவர்கள்தான் பொறுப்பு என 32 பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம் அவர் எழுதியது தானா? அவரது கையெழுத்து தானா? என்று உறவினர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் கேட்ட போது எழுத்துக்கள் மற்றும் கையெழுத்து அனைத்தும் அவருடையது என தெரிவித்தனர். இதில் ஒரு கடிதம் நெல்லை எஸ்பிக்கும், மற்றொரு கடிதம் அவரது சகோதரியின் மகனுக்கும் எழுதப்பட்டவை. ஆனாலும் அந்த கடிதங்கள் தடயவியல் நிபுணர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை இன்னும் வரவில்லை. அவர் கடிதத்தில் கூறியது போன்று சந்தேகத்தின் பேரில் 32 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் அவர்களிடம் மீண்டும் போலீசார் விசாரணை நடத்துவர். இதில் துப்பு துலக்குவதற்காக 10 தனிப்படை அமைக்கப்பட்டது. ஒவ்வொரு தனிப்படையினரும் ஒவ்வொரு டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட முடிவுகள் மட்டுமே வந்துள்ளது. அதில் அவரது உடலில் எந்தவிதமான காயங்களும் இல்லை. கொலையா, தற்கொலையா என அறிக்கையில் கூறப்படவில்லை. இறுதி கட்ட பிரேத பரிசோதனை, தடயவியல் உட்பட பல்வேறு அறிக்கைகளின் வந்த பின்னரே இவ்வழக்கில் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியும்.
ஜெயக்குமார் சடலம் கிடந்த இடத்திலிருந்து இரு நாட்களுக்கு முன்னர் தீயில் கருகிய டார்ச் லைட் மற்றும் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பழைய கத்தி ஆகியவை தடயவியல் நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த வழக்கிற்கும் இந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை. எந்த ஒரு வழக்கிலும் விசாரிப்பதற்கு 10 தனிப்படை அமைக்கப்பட்டது கிடையாது. ஜெயக்குமார் வழக்கில் தனிப்படை போலீசாரின் விசாரணை சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இவ்வழக்கில் மர்ம முடிச்சுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் அவிழும், முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது.
இவ்வழக்கு இன்று வரையிலும் சந்தேக மரணமாகவே கருதப்படுகிறது. தனிப்படை மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியிலும் விசாரணை, சைபர் க்ரைம் போலீசார் உட்பட பல்வேறு பிரிவு போலீசார் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். அவரது மூத்த மகன் கருத்தையாவிற்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையும் விரைவில் வரவுள்ளது. பல்வேறு கோணங்களில் தனிப்படையினர் திருப்திகரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவு எட்டப்படும்என்றார்.. பேட்டியின் போது நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பா.மூர்த்தி, நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் மற்றும் டிஎஸ்பிக்கள் உடனிருந்தனர்.
* முக்கிய தடயமாக சிக்கிய தீப்பெட்டி கடை கடையாக விசாரணை
ஜெயக்குமார் சடலம் கிடந்த இடத்தில் நேற்று முன்தினம் தீப்பெட்டி ஒன்று சிக்கியது. அந்த தீப்பெட்டி ஜெயக்குமாரின் உடலை எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கலாமா? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனை முக்கிய தடயமாக பார்க்கும் போலீசார் அந்த தீப்பெட்டியை திசையன்விளையில் மொத்தமாக கொள்முதல் செய்து கடைகளுக்கு விற்கும் வியாபாரியிடம் நேற்று காலை விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் தீப்பெட்டிகளை திசையன்விளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் எந்தெந்த கடைகளுக்கு சப்ளை செய்வார்? என்று கேட்டறிந்தனர். அதனை தொடர்ந்து கரைச்சுத்துபுதூர் பகுதியி்ல் உள்ள கடைகளில் தீப்பெட்டி வாங்கியவர்களின் விபரத்தை சேகரித்தால் குற்றவாளிகள் சிக்கக்கூடும் என்ற கோணத்தில் சிசிடிவிக்களை ஆய்வு செய்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
* கடலில் உடலை வீச திட்டம்?
காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அவர் உயிரிழந்து மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு பிறகு உடல் எரியூட்டப்பட்டதாக உடற்கூறு பரிசோதனை தகவல்கள் கூறுகின்றன. உடல் கிடந்த தோட்டத்திலிருந்து கடல் பகுதி மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது போன்ற நீர் நிலைகளில் உடலை போட்டு விடலாம் என்ற அடிப்படையில் கம்பி சுற்றப்பட்டு கடப்பா கல், இரும்பு தகடுகள் கட்டப்பட்டிருப்பதாக காவல்துறை தடய ஆய்வில் தெரியவந்துள்ளது’’ என்றார்.
* ராமஜெயம் வழக்குடன் கருத முடியாது
பேட்டியின் போது ஐஜி கண்ணன், ராமஜெயம் கொலை வழக்கையும், கேபிகே ஜெயக்குமார் சந்தேக மரணத்தையும் ஒன்றாக கருத முடியாது. ராமஜெயம் வழக்கினை எடுத்த மாத்திரத்திலேயே கொலை என அறியப்பட்டது. ஆனால் காங்., தலைவர் மரணத்தை அவ்வாறு கூற முடியாது என தெரிவித்தார்.
The post உடலில் கடப்பா கல் கட்டப்பட்டுள்ளது ஜெயக்குமார் மரண மர்மம் 1 வாரத்தில் முடிவுக்கு வரும்: தென் மண்டல ஐஜி கண்ணன் பேட்டி appeared first on Dinakaran.