×

கோயில் நிதி ரூ.86 லட்சம் கையாடல் மாஜி அறநிலையத்துறை அதிகாரி அதிரடி கைது: தர்மபுரி சிறையில் அடைப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் கோயில் நிதி ரூ.86 லட்சத்தை கையாடல் செய்த வழக்கில், முன்னாள் அறநிலையத்துறை ஆய்வாளரை, நேற்று திருச்சியில் கைது செய்த தனிப்படை போலீசார், தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தைச் சேர்ந்தவர் பால்வண்ணன்(57). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்ட இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளராக, கடந்த 2021 முதல் 2023 டிசம்பர் 11 வரை பணியாற்றி வந்தார். இவரது கட்டுப்பாட்டில், ஊத்தங்கரை வட்டாரத்தில் உள்ள 43 கோயில்கள் இருந்தன. இதனிடையே, இந்த கோயில்களின் வைப்புநிதி மற்றும் புனரமைப்பு நிதி ரூ.86 லட்சத்து 6 ஆயிரத்தை பால்வண்ணன் கையாடல் செய்து விட்டதாக, கிருஷ்ணகிரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொ) ஜோதிலட்சுமி மற்றும் ஊத்தங்கரை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் வெங்கடாசலம் ஆகியோர், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, பால்வண்ணன் துறை ரீதியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவர் திருச்சியில் இருப்பதாக தகவல் தெரியவந்தது. அதன் பேரில், ஊத்தங்கரை தனிப்படை போலீசார், நேற்று திருச்சிக்கு விரைந்து சென்று பால்வண்ணனை கைது செய்தனர். பின்னர், அவரை ஊத்தங்கரை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

The post கோயில் நிதி ரூ.86 லட்சம் கையாடல் மாஜி அறநிலையத்துறை அதிகாரி அதிரடி கைது: தர்மபுரி சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Ex ,Charity Department ,Dharmapuri ,Oodhangarai ,Trichy ,Palvannan ,Ladapuram, Perambalur district ,Krishnagiri district ,Ex- ,department ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு