×
Saravana Stores

மும்பையை சூறையாடிய புழுதிப்புயல் விளம்பர பேனர் சரிந்து 8 பேர் பலி: 57 பேர் காயம்

மும்பை: மும்பையில் நேற்று கடும் புழுதிப்புயல் வீசியது. இதனால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. காட்கோபரில் விளம்பர பேனர் சரிந்து பெட்ரோல் பங்க் மீது விழுந்ததில் 57 பேர் காயம் அடைந்தனர். 8 பேர் இறந்தனர்.

மும்பையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மும்பையில் திடீர் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி நேற்று நகரில் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. புழுதிப்புயலும் வீசியது. திடீர் மழை மற்றும் புழுதிப்புயல் காரணமாக விமானம், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவைகள் பாதிப்படைந்தன. மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. 15 விமானங்கள் திருப்பி வடப்பட்டன. மாலை 5 மணியளவில்தான் விமான சேவை சீரானது.

மெட்ரோ சேவையும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஆரே – அந்தேரி இடையே விளம்பர பேனர் விழுந்து வயர்கள் துண்டிக்கப்பட்டதால் இந்த வழியாக இயக்கப்பட வேண்டிய மெட்ரோ ரயில் சேவை நிறத்தப்பட்டது. ஹார்பர் லைனில் இயக்கப்பட வேண்டிய புறநகர் ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டது. புழுதிப்புயல் காரணமாக காட்கோபர் செட்டாநகர் ஜங்ஷனில் 100 அடி உயர பிரமாண்ட விளம்பரப் பலகை பயங்கர சத்தத்துடன் சரிந்து பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இதனால் அப்பகுதியில் நின்றிருந்த மற்றும் அந்த வழியாகச் சென்ற பலர் சிக்கிக் கொண்டனர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 57 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, ராஜாவாடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 8 பேர் பரிதாபமாக இறந்தனர். எம்எம்ஆர்டிஏ மற்றும் தீயணைப்பு படை சார்பில் 60க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்புப் பணிக்கு குவிக்கப்பட்டனர். விளம்பர பலகை விழுந்த இடத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பார்வையிட்டார். மீட்பு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டது. மும்பை போலீசார், மாநகராட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவினர் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து மீட்பு பணியை விரைந்து மேற்கொண்டதாக துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தெரிவித்தார்.

ஜோகேஸ்வரி பகுதியில் பலத்த காற்றால் தென்னை மரம் சரிந்து விழுந்தது. காற்றில் தென்னை மரம் அசைவதை பார்த்ததும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் அந்த மரம் அங்கிருந்த ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோ டிரைவர் காயம் அடைந்தார். மத்திய ரயில்வேயில், தானே மற்றும் முலுண்ட் ரயில் நிலையங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், அந்த ரயில் நிலையங்களில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கேட்வே ஆப் இந்தியா பகுதியில் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் வழக்கமாக ஜூன் மாதம் தான் பருவமழை தொடங்கும். செப்டம்பர் வரை நீடிக்கும். நேற்று திடீரென வீசிய புழுதிப்புயல் காரணமாக மும்பை நகரின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

The post மும்பையை சூறையாடிய புழுதிப்புயல் விளம்பர பேனர் சரிந்து 8 பேர் பலி: 57 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Ghatkopar ,Dinakaran ,
× RELATED மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி...