×
Saravana Stores

4ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு; 96 தொகுதிகளில் 63% வாக்குப்பதிவு: ஆந்திராவில் பல இடங்களில் வன்முறை கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு

புதுடெல்லி: நான்காம் கட்ட மக்களவை தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆந்திராவில் பல இடங்களில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் தொண்டர்கள் இடையே மோதல் நடந்தது. கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவங்களால் அங்கு பதற்றம் நிலவியது.

நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. முதல் கட்ட தேர்தலில் 102 தொகுதிகளுக்கும், 2ம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கும், 3ம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 4ம் கட்டமாக 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுடன் சேர்த்து 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தெலங்கானாவில் 17 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அம்மாநில தலைநகர் நகரில் முதல் முறையாக பெரிய அளவிலான தேர்தல் நேற்று நடந்தது. ஆனாலும் மற்ற பகுதிகளை விட நகரில் குறைந்த அளவே வாக்காளர்கள் வந்து வாக்களித்தனர். பீகாரின் லக்கிசாரி வாக்குச்சாவடியில் ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் வாக்களித்தார். ஒன்றிய அமைச்சரும் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் தொகுதி பாஜ வேட்பாளருமான கிஷன் ரெட்டி, ஐதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் வேட்பாளர் அசாதுதீன் ஓவைசி, தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் ஆகியோர் ஐதராபாத் வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கடப்பா தொகுதியில் உள்ள ஜெயமஹால் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடு, அவரது மனைவி புவனேஸ்வரி, மகனும் மங்களகிரி சட்டமன்ற வேட்பாளருமான லோகேஷ், மருமகள் பிராமணி ஆகியோர் உண்டவள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திலும், ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாண் மங்களகிரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திலும், நடிகையும் அமைச்சருமான ரோஜா, அவரது கணவர் செல்வமணி ஆகியோர் நகரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திலும் தங்களது வாக்குகளை செலுத்தினர். காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, அவரது மகனும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா, முதல் முறை வாக்காளர்களான உமர் அப்துல்லாவின் மகன்கள் ஜாகிர், ஜமிர் ஆகியோர் நகரில் வாக்களித்தனர். ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் உள்ள வாக்குச் சாவடியில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் அவரது மனைவி உஷா நாயுடு ஆகியோர் வாக்களித்தனர். இவ்வாறாக அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடப்பதால் வரலாறு காணாத வகையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் அங்கு பல இடங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக பல்நாடு, கடப்பா மற்றும் அன்னமய்யா மாவட்டங்களில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் தொண்டர்கள் இடையே பயங்கர மோதல்கள் நடந்தன. அனந்தபுரம் மாவட்டம் தாடிப்பத்திரி என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இரு கட்சியினரும் சரமாரி கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதையறிந்த மாவட்ட எஸ்.பி. அமித்பர்தார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அப்போது எஸ்பி அமித்பர்தார் மீதும் சிலர் கல் வீசினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் அனைத்தும் உடைக்கப்பட்டது. சில வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதே போல, வெமுரு, தர்சி, இச்சாபுரம், குப்பம், மாச்சேர்லா, மார்க்கபுரம், பாலகொண்டா மற்றும் பெடகுராபவுடு உள்ளிட்ட பல சட்டப்பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டது. உபியில் 13 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில், ஷாஜகான்பூரில் உள்ள சில கிராமங்களில் சாலை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை அரசு நிறைவேற்றித் தராததை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளில் நடந்த தேர்தலில் ஆங்காங்கே சில வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. பிர்பூம் மற்றும் பர்தாமான்-துர்காபூர் தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ தொண்டர்கள் மோதிக்கொண்டனர். ஆனாலும், வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் மொத்தமுள்ள 21 மக்களவை தொகுதிக்கும், 147 சட்டப்பேரவை தொகுதிக்கும் 4 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக நேற்று தேர்தல் தொடங்கியது. இதில், 4 மக்களவை மற்றும் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக நடந்த போலி வாக்கெடுப்பின் போது பல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு கண்டறியப்பட்டதால் பரபரப்பு நிலவியது. 65 வாக்கு இயந்திரங்கள், 83 கட்டுப்பாட்டு உபகரணங்கள், 110 விவிபேட் இயந்திரங்கள் மாற்றப்பட்டு தேர்தல் அமைதியாக நடந்தது. இறுதியில் மாலை 6 மணியுடன் முடிவடைந்த வாக்குப்பதிவில் 63 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதல் 3 கட்ட தேர்தலில் முறையே 66.14%, 66.71% மற்றும் 65.68% வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர வேட்பாளர்கள்
நேற்றைய 4ம் கட்ட தேர்தலில் 1717 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வரான சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கன்னோஜ் தொகுதியில் களமிறங்கினார். மேற்குவங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியில் ஆளும் திரிணாமுல் சார்பில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பி மஹுவா மொய்த்ராவும், பாஜ சர்பில் அம்ரிதா ராயும் போட்டியிட்டனர். மேற்கு வங்கத்தின் பகரம்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானும் அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் போட்டியிட்டனர். பீகாரின் பெகுசராய் தொகுதியில் ஒன்றிய அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான கிரிராஜ் சிங் போட்டியிட்டார். தெலங்கானாவில் ஐதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசியும் அவரை எதிர்த்து பாஜ சார்பில் நடிகை மாதவி லதாவும் களமிறங்கினர்.

வாக்காளரை அறைந்த எம்எல்ஏ.வுக்கு வீட்டுகாவல்
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி எம்.எல்.ஏ. வேட்பாளர் சிவகுமார் வாக்குப்பதிவு செய்ய நேரடியாக வரிசையில் நிற்காமல் சென்றார். அப்போது அங்கிருந்த வாக்காளர் ஒருவர் ஏன் நீங்கள் வரிசை நிற்க மாட்டீர்களா என கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ அந்த வாக்காளரை சரமாரியாக தாக்கினார். தொடர்ந்து அவரும் எம்எல்ஏ சிவக்குமார் மீது திருப்பி தாக்கினார். இதனால் எம்எல்ஏவுடன் வந்தவர்களுக்கும், வாக்காளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வீடியோ வைரலான நிலையில் வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட எம்எல்ஏ சிவக்குமாரை தேர்தல் முடிவுகள் வரும் வரை வீட்டு காவலில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எஞ்சியிருப்பது 164 தொகுதிகள்
முதல் கட்ட தேர்தலில் 102 தொகுதிகள், 2ம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகள், 3ம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகள் மற்றும் நேற்றைய 4ம் கட்ட தேர்தலில் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜ வேட்பாளரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனால் அங்கு வாக்குப்பதிவு நடக்கவில்லை. எனவே 4 கட்ட தேர்தல் முடிவில் இதுவரை 379 தொகுதிகளில் தேர்தல் முடிந்து விட்டது. இனி எஞ்சியிருப்பது 164 தொகுதிகள் மட்டுமே. இதில், வரும் 20ம் தேதி 5ம் கட்ட தேர்தலில் 49 தொகுதிகளிலும், வரும் 25ம் தேதி 6ம் கட்ட தேர்தலில் 58 தொகுதிகளிலும், 7வது மற்றும் இறுதி கட்ட தேர்தலில் 57 தொகுதிகளிலும் தேர்தல் நடக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

The post 4ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு; 96 தொகுதிகளில் 63% வாக்குப்பதிவு: ஆந்திராவில் பல இடங்களில் வன்முறை கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு appeared first on Dinakaran.

Tags : 4th Pillar elections ,Andhra Pradesh ,NEW DELHI ,Lok Sabha elections ,Telugu ,YSR Congress ,Andhra ,4th Lok Sabha elections ,
× RELATED ஆந்திராவுக்கு இருண்டகாலம்: சொல்கிறார் ஜெகன்மோகன்