புதுடெல்லி: தேர்தல் பிரசாரங்களின் போது வெறுப்பு பேச்சுக்களை தொடர்ந்து பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்ற வழக்கை விசாரிக்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம், அதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘‘மக்களவை தேர்தல் பிரசரங்களில் ஈடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய வெறுப்பு பேச்சுக்களை பேசியிருந்தார்.
அதில்,‘‘நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று காங்கிரஸ் கூறியிருக்கிறது. உங்களின் சொத்துக்களை ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்போகிறார்கள். அதேப்போன்று பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்க போகிறார்கள். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று காங்கிரஸ் கட்சியை முழுக்க மத ரீதியிலாக முன்வைத்து பிரசாரம் செய்தார். மோடியின் இத்தகைய பிரசாரம் உச்சக்கட்ட இஸ்லாமிய வெறுப்பு. தேர்தல் ஆணையமும் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசிய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். இதேப்போன்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோரும் பேசி வருகின்றனர். அதனையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேற்கண்ட மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த மனு உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. இதனை விசாரிக்க எந்தவித முகாந்திரமும் கிடையாது என தெரிவித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தனர்.
The post வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.