×

பெண் காவலர் பற்றி சர்ச்சையால் கைது யூடியூபர் பெலிக்ஸ் திருச்சி சிறையில் அடைப்பு

திருச்சி: பெண் காவலர் பற்றி சர்ச்சை கருத்து பதிவு வழக்கில் கைதான யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு நேற்று திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த யூடியூபர் சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதுதொடர்பாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேசபாபு, பேட்டி கொடுப்பவரை விட கேள்வி கேட்பவர்களை தான் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டுமென அதிரடியாக தெரிவித்து, முன்ஜாமீன் வழங்க மறுத்ததோடு, யூடியூப் சேனல்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட்டார். இது குறித்து போலீஸ் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, டெல்லிக்கு பெலிக்ஸ் ஜெரால்டு தப்பி சென்றார். இந்த தகவல் அறிந்ததும் டெல்லிக்கு திருச்சி தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். கடந்த 11ம் தேதி டெல்லி நொய்டாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர், சென்னையில் இருந்து போலீஸ் வாகனம் மூலம் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் ஆபீசுக்கு நேற்று மதியம் அழைத்து வரப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு அவர், திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியான 3வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 27ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, அவர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பெலிக்ஸ் ஜெரால்டு மீது சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதனால் ஒவ்வொரு வழக்காக அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

* அவதூறு வீடியோவை நீக்க யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம்
பெண் காவலர்கள் குறித்து யூடியூப் சேனலில் அவதூறாக பேசிய பதிவுவை நீக்க சென்னை பெருநகர சைபர் க்ரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் பெண்கள் குறித்து அவதூறாக பேசிய வீடியோவால் பதற்றமான சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வீடியோ பதிவை நீக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

* பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியவருக்கு பெண் போலீஸ் பாதுகாப்பு
திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் அலுவலகத்துக்கு நேற்று மதியம் விசாரணைக்காக பெலிக்ஸ் ஜெரால்டு அழைத்து வரப்பட்டார். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களே அவரை அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து சிறை வரை பெண் காவலர்களின் பாதுகாப்பில் பெலிக்ஸ் ஜெரால்டு இருந்தார். வெயில், மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களிலும், இரவு ரோந்து பணியிலும் ‘கம்பீரத்துடன்’ பெண் காவலர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். பெண் காவலர்கள் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெலிக்ஸ் ஜெரால்டை முழு பாதுகாப்புடன் பெண் காவலர்கள் அழைத்து வந்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நீதிபதி முன்பும் 8 பெண் போலீசார், பெலிக்ஸ் வெளியிட்ட ஆபாச பேச்சு குறித்த வீடியோவால் தாங்கள் வீட்டிலும் வெளியிலும் அவமானப்படுத்தப்படுகிறோம் என்று முறையிட்டுள்ளனர். இதைக் கேட்ட பிறகே அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

The post பெண் காவலர் பற்றி சர்ச்சையால் கைது யூடியூபர் பெலிக்ஸ் திருச்சி சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Felix ,Trichy ,Felix Gerald ,Trichy Central Jail ,
× RELATED யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் முன்ஜாமீன் மனு தள்ளுபடி