ஓசூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியாக, ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து விநாடிக்கு 570 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. கதவணை வழியாக வெளியேறிய தண்ணீரில், ஆங்காங்கே 30 அடி உயரத்திற்கு நுரை பொங்கியதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். கர்நாடக மாநிலம் மற்றும் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில், கோடை மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணையின் மதகுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அணைக்கு வரக்கூடிய மழைநீர் முழுவதுமாக தென்பெண்ணை ஆற்றில் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 474 கன அடியாக இருந்த நிலையில், நேற்று 205 கனஅடியாக குறைந்தது. இருந்த போதும் அணையில் இருந்து, விநாடிக்கு 570 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோடை வெயிலால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு, விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், கர்நாடகத்தில் இருந்து ரசாயனம் கலந்து வருவதால் பல இடங்களில் மலைபோல குவியல் குவியலாக நுரை பொங்கியதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விளைநிலங்களில், 30 அடி உயர தென்னை மரத்தை முழுவதும் மூடும் அளவுக்கு நுரை பொங்கி காட்சியளிக்கிறது. சுமார் 2 ஏக்கர் பரப்பிலான முட்டைகோஸ் தோட்டம் முழுவதும் ரசாயன நுரையால் மூடப்பட்டதால், பல லட்சம் மதிப்பிலான அறுவடைக்கு தயாராக இருந்த முட்டைகோஸ் சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். எனவே, கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தண்ணீரில், ரசாயன கழிவுகள் கலப்பதை மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
The post தொடர் மழை எதிரொலியாக கெலவரப்பள்ளி அணையில் 570 கனஅடி தண்ணீர் திறப்பு: ரசாயனம் கலந்ததால் 30 அடி உயரம் நுரை பொங்கியது appeared first on Dinakaran.