கோவை: தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் யூடியூபர் சங்கரை கடந்த 4ம் தேதி தேனியில் கைது செய்தனர். அப்போது அவரது காரில் இருந்து 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்த கோவை சைபர் கிரைம் போலீசார் முடிவு ெசய்தனர். இதனிடையே சங்கருககு மருத்துவ சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் பலத்த பாதுகாப்புடன் கடந்த 10ம் தேதி சங்கருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன்தொடர்ச்சியாக மீண்டும் நேற்று கோவை அரசு மருத்துவமனைக்கு சங்கரை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அவருக்கு 2வது முறையாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.பிறகு கோவை மத்திய சிறைக்கு சங்கரை போலீசார் அழைத்துச் சென்ற போது, சிறை கண்காணிப்பாளருக்கு எதிராக அவர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் சங்கர் போலீசாருடன் சிரித்து பேசியபடி சென்றார். ஒரே நேரத்தில் கோஷம் எழுப்பியும், சிரித்தும் சங்கர் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் அவர் திட்டமிட்டு கோவை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதற்கிடையே பெண் காவலர்கள் குறித்த அவதூறு வழக்கில் ஒரு நாள் மட்டும் சங்கரை விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் இடையே 15 நிமிடம் வழக்கறிஞர் சந்திக்க அனுமதி வழங்கவும், காவல் முடிந்து இன்றுமாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோவை சைபர் கிரைம் போலீசார் சங்கரை அழைத்துச் சென்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது பெண் காவலர்கள் குறித்து திட்டமிட்டு அவதூறாகப் பேசியதன் பின்னணி குறித்து சரமாரியாக கேள்வி கேட்டு பதிலை போலீசார் பதிவு செய்தனர்.
The post ஒரு நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி யூடியூபர் சங்கரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை: சிறை கண்காணிப்பாளருக்கு எதிராக கோஷம் appeared first on Dinakaran.