×

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்று முதல் 18ம் தேதி வரை மருத்துவ, தடுப்பூசி முகாம்: பொது சுகாதாரத்துறை திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்று முதல் வரும் 18ம் தேதி வரை மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த பொது சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. ஹஜ் பயணம் முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். அதன் படி, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாமை நடத்த அந்தந்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்று (13-ந் தேதி) முதல் வரும் 18-ந் தேதி வரை மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த பொது சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1,75,025 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதில் தமிழகத்திலிருந்து மட்டும் 5,803 போ் பயணம் மேற்கொள்கின்றனர்.

அவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் தடுப்பூசி நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அந்த அந்த மாவட்டங்களில் உள்ள ஹஜ் கமிட்டி உடன் இணைந்து, மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து இந்த பணியை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்களில் இந்த மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. அதன்படி, சென்னையில் இன்று முதல் தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி அலுவலகத்தில் நடைபெறுகிறது. 65 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணிகளுக்கு இந்த காலத்தில் பொதுவாக வரக்கூடிய நோய்களுக்கான தடுப்பு ஊசிகளையும் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்று முதல் 18ம் தேதி வரை மருத்துவ, தடுப்பூசி முகாம்: பொது சுகாதாரத்துறை திட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Public Health Department ,Tamil Nadu ,Hajj ,Saudi Arabia ,Muslims ,
× RELATED அரசு மருத்துவமனைகளில் பணியில் சேராத 193...