×
Saravana Stores

எர்ணாகுளம் -வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க வேண்டும்: பயணிகள் எதிர்பார்ப்பு

மானாமதுரை: கேரள மாநிலம் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலை தினமும் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி முதல், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சனிக்கிழமை மதியம் 12:15 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை 5:50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இந்த ரயில் கோட்டயம், கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக வேளாங்கண்ணி சென்றடையும். இந்த ரயில் வேளாங்கண்ணிக்கு செல்லும்போது விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு வேளாங்கண்ணி செல்ல வசதியாக உள்ளது. அதே போல ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவிற்கு கேரளத்தில் இருந்து வரும் இஸ்லாமிய யாத்ரீகர்கள் மானாமதுரை வந்து அங்கிருந்து ராமநாதபுரத்திற்கு பயணிகள் ரயில்களில் செல்கின்றனர். இவ்வாறு இரு மார்க்கங்களிலும் மூன்று மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதும், கேரளாவில் இருந்து ஏர்வாடி, ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கும் பயன்படுவதால் இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்கவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்கவேண்டும். இதன் மூலம் தென்மாவட்ட மக்கள் வேளாங்கண்ணி சென்று வர வசதியாக இருக்கும். கேரளாவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேரடியாக ரயில் இல்லாத நிலையில் இந்த ரயிலில் மானாமதுரையில் இறங்கி ராமேஸ்வரம் ஏர்வாடி செல்ல கேரள பயணிகளுக்கும் வசதியாக இருக்கும் என்பதால் இந்த ரயிலை தினமும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post எர்ணாகுளம் -வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க வேண்டும்: பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Ernakulam ,Velankanni ,Kerala ,Dinakaran ,
× RELATED தாம்பரத்தில் இருந்து மானாமதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்