ஐதராபாத்: இஸ்லாமியப் பெண்களின் ஆதார் கார்டை சரிபார்த்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் செயலுக்கு தெலங்கானா முதல்வர் விமர்சனம் செய்துள்ளார். மக்களவைத் தேர்தலை பொறுத்தவரையில் ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் பாஜக வேட்பாளர் மாதவி லதா ஆதார் அட்டை வாங்கி சரிபார்த்துள்ளார்.
அதன்பின்னர், அவர்களை வாக்குச்சாவடிக்குள் அனுமதித்துள்ளார். மேலும், வாக்குச்சாவடியில் காத்திருந்த இஸ்லாமிய பெண்களிடம் பர்தாவை திறந்து முகத்தை காண்பிக்குமாறு கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது. சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இதுதொடர்பாக பாஜக வேட்பாளர் மாதவி லதா கூறுகையில்; நான் ஒரு வேட்பாளர். ஒருவரின் அடையாள அட்டையை சரிபார்க்கும் உரிமை சட்டப்படி எனக்கு உள்ளது. அவர்களிடம் ‘உங்கள் ஐடி கார்டுகளை காட்டுங்கள்’ என பணிவாகதான் கேட்டேன்.
இதை யாராவது பெரிதாக்க நினைத்தால், அவர்கள்தான் பயந்திருக்கிறார்கள்” என்றார். இதை தொடர்ந்து, ஐதராபாத் தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே மாதவி லதா பிரச்சாரத்தின்போது மசூதியை நோக்கி அம்பை எய்வது போல் செய்கை செய்ததால் வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வாக்களிக்க வந்த இஸ்லாமியப் பெண்களின் ஆதார் கார்டை சரிபார்த்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் செயலுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சனம் செய்துள்ளார். அவர் அளித்த பேட்டியில்; ““நான் அந்த வீடியோவை பார்க்கவில்லை, ஆனால் பாஜக திட்டமிட்டு முஸ்லிம் வாக்குகளைச் சிதைக்க முயற்சிக்கிறது, ஆனால் இந்த செயல்கள் அனைத்தும் பாஜகவுக்குப் பயனளிக்கப் போவதில்லை, மாற்றாக அசாதுதீன் ஒவைசிக்கு உதவப் போகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post இஸ்லாமியப் பெண்களின் ஆதார் கார்டை சரிபார்த்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் செயலுக்கு தெலங்கானா முதல்வர் விமர்சனம்! appeared first on Dinakaran.