×

மனதில் தீபமேற்றுவோம்!

ஜான் டக்கர் என்ற ஒரு அருட்பணியாளர் நற்செய்தி பணிக்காக தென் தமிழ்நாட்டிற்கு வந்தார். சுமார் 120 வருடங்களுக்கு முன்பு அவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் நற்செய்தி பணி செய்த போது, இங்குள்ள சூழ்நிலையைக் கண்டு இங்கிலாந்திலுள்ள தனது இளம் சகோதரி சாராள் டக்கருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் ‘தென்னிந்தியாவில் உள்ள பெண்கள் பள்ளிக்கூடமே போவதில்லை. அவர்கள் படிப்பதற்கு பள்ளிக்
கூடங்களும் இல்லை’ என பெண் பிள்ளைகள் படிக்க முடியாத சூழ்நிலைகளையும், ஆண் ஆதிக்க சமுதாயக் கட்டுப்பாடுகளையும் விவரித்து அழுகையோடு எழுதினார்.

14 வயதுடைய மாற்றுத் திறனாளி மாணவி சாராள் டக்கர் இக்கடிதத்தை படித்தவுடன் கண்ணீர் மல்க கதறி அழுதாள். இயேசப்பா என்னால் இந்தியாவிற்கு போக இயலாத சூழ்நிலையில் உள்ளேன். ஆனால் எனது எதிர்காலத்திற்கென எனது பெற்றோர் வைத்திருக்கும் 100 பவுன்களையும், தன்னுடன் படிக்கும் சக மாணவிகளிடம் கெஞ்சி கேட்டு சுமார் 200 பவுன்களையும் வசூலித்து இந்தியாவிலுள்ள தனது அண்ணன் ஜான் டக்கருக்கு அனுப்பி வைத்து உடனடியாக பெண்கள் கல்வி பயில ஒரு பள்ளியையும், ஆசிரியர் பயிற்சிக் கல்வி நிறுவனம் ஒன்றையும் நிறுவ கேட்டுக்கொண்டாள்.

120 வருடங்களுக்கு முன்னால் அப்படி உருவான கல்வி நிறுவனம்தான் பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற சாராள் டக்கர் பள்ளி மற்றும் சாராள் டக்கர் மகளிர் கல்லூரி. லட்சக்கணக்கான பெண்களுக்கு அறிவொளி ஏற்றிய சாராள் டக்கர் கடைசிவரை தமிழ்நாட்டிற்கு வந்தது இல்லை என்பது சரித்திரம். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து நம் தேசத்துப் பெண்கள் கல்வி பயில நகைகளை அனுப்பி வாழ்வை தியாகம் செய்த சாராள் டக்கர் என்ற பெண்மணியின் நல்வாழ்விற்காக தேவனைத் துதிப்போம்.

இறைமக்களே, ‘நீங்கள் உலகத்துக்கு வௌிச்சமாயிருக்கிறீர்கள்’ (மத்.5:14) என்று இறைவேதம் கூறுகிறது. பாவம் என்னும் கொடிய இருளில் பாதை தெரியாமல் தடுமாறுவோர் ஏராளமானோர். மட்டுமல்லாது எளிவர்கள். வறியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் என சமூகக் கட்டமைப்பில் சிக்கியுள்ளோரை மீட்கவும், இருளில் இறை வெளிச்சமாக பிரகாசிக்கவும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் கடமைப்பட்டுள்ளனர். வெளிச்சமாக பிரகாசிக்க பெலவீனங்களோ, வயதோ ஒருபோதும் தடையில்லை. ஆகவே மனதில் தீபமேற்றுவோம்.

– அருள்முனைவர். பெவிஸ்டன்.

The post மனதில் தீபமேற்றுவோம்! appeared first on Dinakaran.

Tags : John Tucker ,South Tamil Nadu ,Tirunelveli District ,Palayangottai ,England ,
× RELATED கனமழை எச்சரிக்கை எதிரொலி சுற்றுலா...