×
Saravana Stores

கலசபாக்கம், சேத்துப்பட்டு அருகே அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம்

*திரளான பக்தர்கள் பங்கேற்பு

கலசபாக்கம் : கலசபாக்கம், சேத்துப்பட்டு அருகே அக்னி வசந்த விழாவையொட்டி நேற்று துரியோதனன் படுகளம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த காந்தபாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. அக்னி வசந்த விழாவையொட்டி கடந்த மாதம் 22ம் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து நாடகங்களும் நடைபெற்று வந்தன.

முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் நேற்று காலை நடைபெற்றது. 75 அடி உள்ள துரியோதனன் சிலை படுகளம் நிகழ்ச்சி நடத்துவதற்காக அமைக்கப்பட்டு இருந்தது. பீமன், துரியோதனன் வேடம் அணிந்த தெருக்கூத்து கலைஞர்கள் படுகளம் நிகழ்ச்சியை தத்ரூபமாக நடத்தினர். கலசபாக்கம், சிறுவள்ளூர், மேல் சோழங்குப்பம், காந்தபாளையம், வீரலூர், அருணகிரி மங்கலம், எர்ணா மங்கலம், கிடாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை தீமிதி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இன்று தர்மர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் அருள்மிகு பாஞ்சாலியம்மன் கோயில் வளாகத்தில் கடந்த மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா தொடங்கியது.

நேற்று காலை கோயில் எதிரே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 105 அடி களிமண்ணால் அமைக்கப்பட்ட மிக பிரமாண்டமான துரியோதனன் உருவம் செய்யப்பட்டு கட்டைக்கூத்து நாடக நடிகர்கள் துரியோதனன், பீமன், கிருஷ்ணன், திரவுபதி, காந்தாரி வேடமணிந்து துரியன் படுகளம் நிகழ்ச்சி நடத்திக் காட்டினர். துரியோதனன் குருதியை திரவுபதி கூந்தலில் தடவி சபதம் முடிக்கும் காட்சியும், துரியோதனன் தாய் காந்தாரி ஒப்பாரி வைத்து அழும் காட்சி தத்ரூபமாக நடித்து காட்டினர். மாலை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் திரளான ஆண்களும், பெண்களும் அம்மனுக்கு விரதமிருந்து தீமிதித்தனர்.

The post கலசபாக்கம், சேத்துப்பட்டு அருகே அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் appeared first on Dinakaran.

Tags : Duryodhana ,padukalam ,Agni spring festival ,Sethupattu, Kalasapakkam ,Kalasapakkam ,Duryodhana Padukalam ,Agni Vasantha festival ,Thiruvannamalai District ,Kanthapalayam Village ,Thirupati Amman Temple ,Dinakaran ,
× RELATED பள்ளிப்பட்டு அருகே திரவுபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்