ஈரோடு : உலக செவிலியர் தினத்தையொட்டி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.சாதி, மத வேறுபாடுகளின்றி, சகிப்பு தன்மையுடன் மக்களுக்கு செய்யும் மகத்தான சேவையே செவிலியர் பணியாகும். அத்தகைய செவிலியர்களுக்கென சமுதாயத்தில் நன் மதிப்பை உருவாக்கியவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். அவர் பிறந்த நாளானா மே 12ம் தேதி உலக செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டது. செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மூத்த செவிலியர் டேவிட் தலைமை வகித்தார். செவிலியர் கண்காணிப்பாளர் மணிமேகலை, கிரிஜா, செவிலியர்கள் ராமாயாள், விநாயக கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இத்தினத்தையொட்டி, அரசு மருத்துவமனை செவிலியர்கள் கேக் வெட்டியும், ஒருவருக்கொருவர் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து, மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேசன், உறைவிட மருத்துவர் சசிரேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post உலக செவிலியர் தினம் செவிலியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து appeared first on Dinakaran.