×
Saravana Stores

எப்.சியும் எடுக்கவில்லை சைரன் இல்லாத ஆம்புலன்சில் சென்றால் உயிர் தப்புமா?

*உயிர் காக்கும் உபகரணங்களும் இல்லாததால் மக்கள் வேதனை

காரைக்கால் : 108 எண் என்பது அவசர சிகிச்சைக்காக பிரத்தியேகமானது. ஒருங்கிணைக்கப்பட்ட இலவச மருத்துவ சேவைக்கான ஆம்புலன்ஸ் வசதி என்று பொருள்படும். இந்தியா முழுவதும் செயல்பாட்டில் உள்ள இந்த முறை பொதுமக்களுக்கு பெரும் பvயனாக உள்ளது.தமிழகத்தில் மிகச் சிறப்பான முறையில் 108 ஆம்புலன்ஸ் செயல்பட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வருகிறது. ஆனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அப்படியே நிலைமை தலைகீழாக உள்ளது. புதுச்சேரியில் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களை சேர்த்தும் வெறும் 14 ஆம்புலன்ஸ் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.

இங்கு உயிர் காக்கும் ஊர்தி சேவை என்பது மாறி, இந்த வாகனத்தில் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிலைதான் தொடர்கிறது.ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்தும் 2011ம் ஆண்டு, வாங்கப்பட்டது.தற்போது 13 ஆண்டுகளை கடந்து மிகவும் பரிதாபகரமான நிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது.இதில் 5க்கும் மேற்பட்ட ஊர்திகளுக்கு இன்னமும் எப்.சி. (வாகன தரச்சான்றிதழ்) எடுக்கப்படவில்லை. ஆனால் இதையெல்லாம் சுகாதாரத்துறை கண்டு கொள்வதில்லை.

ஆம்புலன்ஸ் என்றால், சைரன் அலறியபடி சாலைகளில் ஓட வேண்டும். ஆனால் காரைக்காலில் உள்ள பல ஆம்புலன்ஸ்கள் தெருக்களில் மவுன கீதம் வாசித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. சைரன் ரிப்பேர் ஆனால் அதை உடனே மாற்றப்படுவதில்லை. கம்பெனியில் செட்டோடு மாற்ற வேண்டும். இதற்காக ரூ.40 ஆயிரம் கேட்கிறார்களாம், வெளியில் 25 ஆயிரத்துக்கு கிடைக்கும்.

ஆனால் அதனைக் கூட இன்னமும் மாற்றி தரவில்லை. இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர்களே, ஆம்பிளிபயரை பழுது நீக்கி ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். வண்டிகளுக்கெல்லாம் வயதாகிவிட்டதால், சாலைகளில் பயணிக்க முடியாத நிலை. எங்கே ஏதாவது கழட்டிக்குமோ என்ற திக்..திக்.. மனநிலையில் தான் ஆம்புலன்ஸ்களில் வருவதாக டிரைவர்கள் இயக்கி வேதனை தெரிவிக்கின்றனர்.

பவர் ஸ்டியரிங் இல்லாத வண்டியை குறுக்கு சந்தில் நுழைத்து விட்டு,வெளியே எடுக்க முடியாமல் இரவு நேரங்களில் நோயாளிகளுடன் கதறிக்கொண்டு நிற்பதையும் பல இடங்களில் பார்க்க முடிகிறது.ஆம்புலன்ஸ் என்றால் உயிர் காக்கும் மருத்துவ நிபுணர், உயிர் காக்கும் உபகரணங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும்.

ஆனால் புதுச்சேரி, காரைக்காலில் 108 ஆம்புலன்ஸ்சில் ஸ்டெக்சர் கூட சரியாக இருப்பதில்லை என்பது வேதனையாக உள்ளது. இதனால் பல உயிர்கள் வரும் வழியிலேயே பலியாக வேண்டிய அவலமான நிலை சுகாதாரத்துறையில் நீடிக்கிறது.நோயாளியை எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் வாகனத்தில் கொண்டு வருவதுதான்,புதுச்சேரி 108 ஆம்புலன்சின் சேவையாக இருக்கிறது.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் கேட்டபோது:-

காரைக்கால் பகுதியில் குறைந்த அளவிலேயே ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையில் இருந்து வருகிறது. நகரப்பகுதியில் உள்ள ஒரு ஆம்புலன்ஸ் மட்டும் 5 தொகுதிகளுக்கான சேவையில் உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் பல இடங்களுக்கு செல்ல முடியாத நிலை சில நேரங்களில் ஏற்படுகிறது. எனவே நகரப்பகுதிக்கு மட்டும் குறைந்தது 3 ஆம்புலன்ஸ்கள் கூடுதலாக இருக்க வேண்டும்.
அதேபோல் அதிக விபத்துகள் நடைபெறும் திருநள்ளாறு, திருப்பட்டினம், நெடுங்காடு ஆகிய பகுதிகளுக்கு பாயிண்டாக வைத்து கூடுதலாக ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட வேண்டும்.

தற்போது உள்ள 108 ஆம்புலன்ஸ் வாங்கி 13 ஆண்டுகளை கடந்து விட்டதால், பயந்து கொண்டுதான் ஓட்ட வேண்டியுள்ளது. எனவே தமிழகத்தை போல உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள், முதலுதவி தொழில்நுட்ப உதவியாளர் அடங்கிய நவீன ஆம்புலன்ஸ்களை அரசு வாங்கிக் கொடுக்க வேண்டும். நமது புதுச்சேரி சின்னஞ்சிறியது. எனவே பொதுமக்களுக்கு மிகச்சிறப்பான ஆம்புலன்ஸ் சேவையை நம்மால் வழங்க முடியும். இரவு 12 மணிக்கு மேல் எவ்வளவு பெரிய பணக்காரர்கள் ஆனாலும், அவசரத்துக்கு 108க்குதான் போன் செய்து உதவி கேட்கின்றனர்.
எனவே புதுவை அரசும் துறையை கவனிக்கும் முதல்வர் ரங்கசாமியும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.

The post எப்.சியும் எடுக்கவில்லை சைரன் இல்லாத ஆம்புலன்சில் சென்றால் உயிர் தப்புமா? appeared first on Dinakaran.

Tags : FC ,India ,Dinakaran ,
× RELATED பழங்குடியினரின் வாழ்க்கையை வரையறுக்கும் தீபாவளி!