*கடலூர் அருகே பரபரப்பு
ரெட்டிச்சாவடி : சாலையின் தடுப்பு கட்டையில் மோதி நின்ற அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து காரைக்காலுக்கு அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. பஸ்சை திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தனசேகர் (47) என்பவர் ஓட்டிச் சென்றார். நடத்துனராக சுரேஷ்பாபு என்பவர் பணியில் இருந்தார்.
புதுச்சேரி-கடலூர் சாலையில் தமிழக பகுதியான ரெட்டிச்சாவடி மலட்டாறு பாலம் அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் அரசு பஸ் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்புக்கட்டையில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பின்னால் சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு 36 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் அரசு பஸ் மீது வேகமாக மோதியது.
இதில், அரசு பஸ் மற்றும் ஆம்னி பஸ்சின் முன்புறமும் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. மேலும் இவ்விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர்.இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்து சம்பவத்தால் புதுச்சேரி-கடலூர் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post தடுப்புக்கட்டையில் மோதிய அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 30 பேர் படுகாயம் appeared first on Dinakaran.