மதுராந்தகம்: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலாவாசிகள் வசதிக்கென அமைக்கப்பட்டுள்ள கழிவறையில் மதுபாட்டில்களை உடைக்கும் போதை ஆசாமிகள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் கிராமத்தில் வனத்துறையின் பராமரிப்பில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பறவைகள் சரணாலயத்தில் இனப்பெருக்க கூழைக்கடா, வர்ணநாரை, நீர்காகம், நத்தை குத்திநாரை, பாம்பு தாரா, வெள்ளை அறிவால் மூக்கன் உள்ளிட்ட 24 வகையான பறவைகள் மற்றும் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இருந்து வரும் பறவைகள் இங்குள்ள மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்து குஞ்சு பறவைகளுடன் மீண்டும் வெளிநாடு செல்வது வழக்கம்.
இந்த பறவைகளைக் காண உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாட்டு சுற்றுலாவாசிகள், பறவைகள் ஆராய்ச்சியாளர்கள், புகைப்பட நிபுணர்கள் என ஆண்டுதோறும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பறவைகள் சரணாலயத்தை கண்டு ரசித்துச் செல்கின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்கென பறவைகள் சரணாலயம் அருகில் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய மேம்பாட்டு நிதி ரூ5 லட்சம் மதிப்பில் கழிவறை கட்டப்பட்டுள்ளது. இதனை வேடந்தாங்கல் ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்நிலையில், மதுபோதையில் வரும் மர்ம நபர்கள் கழிவறை அருகேயே அமர்ந்து மது குடிக்கின்றனர்.
போதையில் மதுபாட்டில்களை கழிவறை மீது தூக்கி எரிந்து உடைக்கின்றனர். இதனால், கழிவறையில் கண்ணாடி துகள்கள் சிதறிக்கிடக்கிறது. இதனால், பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தியதால் கழிவறை மிகவும் அசுத்தமாக காணப்படுவதோடு தொற்று நோய்களை ஏற்படுத்தும் அவலநிலையில் உள்ளது. எனவே, கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும். அங்கு மதுகுடித்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
The post வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள கழிவறையில் மதுபாட்டில்களை உடைக்கும் போதை ஆசாமிகள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.