சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.ஐபிஎல்-லில் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக சிஎஸ்கே இருந்து வருகிறது. இதற்கு காரணம் சிஎஸ்கேவில் இடம்பெற்றுள்ள மகேந்திர சிங் தோனிதான்.
இதனால், சிஎஸ்கே அணியின் ஆட்டங்கள் உன்னிப்பாக பார்க்கப்பட்டு வருகின்றன. மைதானத்தில் எப்போது தோனி களமிறங்குவார், அவரை காண வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். சென்னையில் சிஎஸ்கே பங்கேற்கும் போட்டி என்றால், ரசிகர்கள் பலரும் முண்டியத்து டிக்கெட்டுகளை வாங்க குவிந்து வருகின்றனர். அப்படி டிக்கெட் கிடைக்காத சமயத்தில், அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் டிக்கெட் கிடைத்தாலும் ரசிகர்கள் போட்டிப் போட்டு வாங்கிச் செல்கின்றனர்.
அவ்வாறு கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து, போலீசார் அவ்வப்போது கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக புகார் அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 10 பேரிடம் இருந்து 27 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
The post சென்னை சேப்பாக்கத்தில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 10 பேர் கைது… 27 டிக்கெட்டுகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.