சென்னை: வல்லூர் அனல் மின் நிலையத்தின் பரமரிப்பு பணிகளை ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் மின் வாரியத்துக்கு சொந்தமான அனல் மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள், சூரிய மற்றும் காற்றாலை மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடி, மேட்டூர், வட சென்னை ஆகிய பகுதிளில் தமிழக மின் வாரியத்துக்கு சொந்தமான 5 அனல் மின் நிலையங்களின் மொத்த மின் நிறுவு திறன் 4,320 மெகா வாட் ஆகும். தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய சொந்த உற்பத்தியை தவிர ஒன்றிய அரசின் மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மத்திய தொகுப்பு மின்சாரமும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சென்னை அருகே அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள வல்லூர் அனல் மின் நிலையம் தேசிய அனல் மின் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவானது.
இதில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 3 அலகுகள் செயல்படுகின்றன. இதன் மொத்த திறன் 1500 மெகாவாட். இதில் தமிழக மின்வாரியத்திற்கு 1,064 மெகாவாட் மத்திய தொகுப்பின் பங்கு கிடைக்கிறது. வல்லூர் அனல் மின் நிலையத்தின் 2வது அலகில் கடந்த ஜன. 3ம் தேதி ஸ்டேட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேலும் இந்த அலகு கடந்த ஜன.4ம் தேதி முதல் ஆண்டு பராமரிப்புப் பணியில் இருந்தும், இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தேசிய அனல்மின் நிறுவனம் ஜூன் 30 வரை வல்லூர் அனல் மின் நிலைய பராமரிப்பு அட்டவணையை நீட்டிக்க தென் பிராந்திய அதிகாரக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மின் நிலையத்தின் அசல் உபகரண உற்பத்தியாளரான பெல் நிறுவனம், ஸ்டேட்டரை பழுதுபார்க்க முடியாது என்று கூறியதுள்ளது. அதனால் ஹரியானாவில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து ஸ்டேட்டரை கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வல்லூர் அனல் மின் நிறுவனத்தின் மாற்று ஸ்டேட்டர் வந்து கொண்டு இருப்பதாகவும், மே 30க்குள் வல்லூருக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய அனல் மின் நிறுவன அதிகாரிகள் கூறினர். வல்லூர் அனல் மின் நிலையத்தின் 2வது அலகை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர எங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று தேசிய அனல் மின் நிறுவனம் தென் பிராந்திய அதிகாரக் குழுவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது. ஆதலால் 2வது அலகு ஜூன் 30ம் தேதிக்குள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த மே 2ம் தேதி மாநிலத்தின் உச்சபட்ச மின் தேவை 20,830 மெகாவாட் என்ற உச்சத்தைத் தொட்டது. சென்னையின் உச்ச மின் தேவை மே 6ம் தேதி 4,590 மெகாவாட் என்ற சாதனையை எட்டியது.
மின் வாரியத்திற்கு சொந்த அனல் மின் திறன் 4,320 மெகாவாட்டாக உள்ளது. மத்திய மின் உற்பத்தி நிலையங்கள், நீண்ட கால மற்றும் குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் இருந்து மாநிலத்தின் பங்குடன், மாநிலத்தின் நிறுவப்பட்ட திறன் 16,417.38 மெகாவாட். மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 7,170 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும் அதிகபட்ச இருப்பு 5,900 மெகாவாட் மட்டுமே உள்ளது. கோடை காலத்தில், பற்றாக்குறையை சமாளிக்க தனியார் நிறுவனங்களுடன் குறுகிய கால ஒப்பந்தம், மாநிலங்களுக்கு இடையேயான மின் பரிமாற்றம் ஆகிய நடவடிக்கைகளை மின் வாரியம் செய்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post வல்லூர் அனல் மின் நிலைய பராமரிப்பு பணி ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டம்: மின் வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.