×

3 ஆண்டுகால திமுக அரசின் ஆட்சியில் ₹3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாதனை

சென்னை: 1967ல் மொத்த இந்தியாவும் தனது அரசியல் பாதையை தேடிக்கொண்டு இருந்த காலம். பல மாநிலங்களில் தேசிய கட்சியான காங்கிரஸ் வலுவாக இருந்த காலம். மாநில கட்சிகள் என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு எந்த மாநிலத்திலும் மாநில கட்சிகள் பெரிதாக எழுச்சி பெறாத அந்த நாட்களில் தமிழ்நாடு மட்டும் தனித்து நின்றது. தமிழ்நாட்டில் 1967ல் திராவிட முன்னேற்ற கழக தலைமையில் அறிஞர் அண்ணா முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றார்.

வடமாநிலங்களில் மத கலவரங்கள் உச்சத்தில் இருந்தது போல தமிழ்நாட்டிலும் ஜாதி ரீதியான மோதல்கள் ஆங்காங்கே இருந்தன. ஜாதி ரீதியான அடக்கு முறைகளுக்கு எதிராக அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சட்டங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. அந்த காலத்தில் சென்னையில் நடந்த சில சம்பவங்கள்தான் குடிசை மாற்று வாரியம் திட்டத்திற்கு உரம் போட்டது. சென்னையில் குடிசை பகுதிகளில் வசித்து வந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் பல்வேறு கட்டங்களில் வெவ்வேறு ஜாதி ரீதியான தாக்குதல்களுக்கு ஆளானார்கள். பல குடிசைகள் 1965ல் தொடங்கி 70களின் காலகட்டங்களில் கொளுத்தப்பட்டது.

குடிசை எரிப்பு நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக இருந்த காலம் அது. திடீர் திடீரென சென்னையில் பல குடிசைகள் பற்றி எரிந்த சோகமான கால கட்டம். அது மட்டுமல்லாமல் சென்னையில் ஏற்பட்ட மழை, புயலில் எல்லாம் குடிசை வீடுகள் சேதம் அடைந்து மக்கள் வருடா வருடம் சாலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. ஆட்சிக்கு வந்த அண்ணா இதை பார்த்தார். இவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டுமே என்று திட்டமிட்டு. ஒவ்வொரு முறை புயல், வெள்ளம், குடிசை எரிப்பில் வீடுகளை இழந்தவர்களுக்கு வெவ்வேறு இடங்களில் வீடுகளை கட்டிக்கொடுத்தார்.

அண்ணா இப்படி ஒவ்வொரு குடிசைகளுக்கும் மாற்று வீடு கொண்டு வந்ததை மிகப்பெரிய இயக்கமாக, திட்டமாக மாற்ற வேண்டும் என்று 1970ல் அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் முடிவு எடுத்தார். அண்ணா கொண்டு வந்த சிறிய மாற்றத்தை பெரிய இயக்கமாக மாற்ற கலைஞர் முடிவு செய்தார். விளைவு குடிசைகளை ஒழித்து எல்லோருக்கும் கான்கிரீட் வீடுகள் கொடுக்கும் முடிவில் கருணாநிதி உருவாக்கிய திட்டமே தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய திட்டம்.

நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானவை அல்ல. அவர்களுக்குக் குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதிகளை ஏற்படுத்துவதும் அவசியம் என்று கருதி, 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் சாதனைகள் படைத்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு 3 ஆண்டுகள் நிறைவடைந்து, 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில் திராவிட மாடல் அரசின் சாதனைகளைத் திரும்பிப் பார்க்கும் போது பிரமிப்பாகவே உள்ளது.
சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களை மேம்படுத்தும் வகையில் திட்டங்களைத் தீட்டித் தாமதமின்றிப் பயன்கள் மக்களைச் சென்றடையச் செய்திடும் திராவிட ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை ஏற்படுத்திட உள்கட்டமைப்புத் திட்டங்களைக் குறித்த காலத்திற்குள் திட்டமிட்டபடி நிறைவேற்றுவதற்கு முதல்வர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தில் சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்கு வீடுகளைத் தாமதமின்றி வழங்கி வருகிறார்.

வீடற்ற மக்களுக்கு வீட்டினை அளிப்பதோடு இக்குடியிருப்புகளில் ஒரு பல்நோக்கு அறை, உறங்கும் அறை, சமையலறை, கழிவறை வசதிகளும், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வசதி, மின்தூக்கி, சாலைகள், தெருமின் விளக்குகள், கான்கிரீட் நடைபாதை, மழைநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளுடன் ஏற்படுத்தி வருகிறார்.

மேலும், சமூக வசதிகளான பள்ளிகள், நூலகம், பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், சிறுகடைகள், பால் விற்பனை நிலையம், சமுதாயக்கூடம் போன்ற வசதிகள் குடியிருப்புகளின் அருகில் அமைந்திட ஆவண செய்திடுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 92 திட்டப் பகுதிகளில் ₹ 3,197.94 கோடியில் கட்டப்பட்ட 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டு வீடற்ற ஏழை எளிய மக்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்
பட்டுள்ளன.
ஏழை எளிய மக்களின் வீட்டிற்கான கனவை நிறைவேற்றி அனுதினமும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்லும் முதலமைச்சர் அவர்களுக்கு ஏழை எளிய மக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

* 37,720 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 3,023 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விற்பனை பத்திரங்கள் மற்றும் 1,733 மேம்படுத்தப்பட்ட மனைகளுக்கும் விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

* மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மூன்றாண்டுகளில், 1,68,495 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 89,429 பயனாளிகளுக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ₹2,078.37 கோடியில் 69,701 புதிய தனி வீடுகள் கட்டுவதற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
* சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக 17 திட்டப் பகுதிகளில் உள்ள 7,582 சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் ₹1,608.88 கோடியில் 9,522 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
* ஏற்கனவே கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் ஆயுட்காலத்தினை அதிகரிக்க ₹59.80 கோடி செலவில் பழுது நீக்குதல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ள 117 திட்டப் பகுதிகளில் 76,434 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
* சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள 79 திட்டப் பகுதிகளில் உள்ள 31,239 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குக் கட்டமைப்பு வசதிகளை ₹82.57 கோடி செலவில் மேம்படுத்த இறுதி செய்யப்பட்டுப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

The post 3 ஆண்டுகால திமுக அரசின் ஆட்சியில் ₹3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாதனை appeared first on Dinakaran.

Tags : Dimuka Government ,Tamil Nadu Urban Housing Development Board ,Chennai ,India ,Congress ,Dinakaran ,
× RELATED 9, 10-ம் வகுப்புகளை தொடர்ந்து 8ம் வகுப்பு...