சென்னை: தமிழகப் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்பதால் சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது கோடைவெயில் கொளுத்தி வரும் நிலையில், அதிகபட்சமாக 111 டிகிரி வரை கடந்த மாதம் வெயில் உச்சத்தை தொட்டது. இருப்பினும், கோடை மழையும் பெய்தது. அதன் தொடர்ச்சியாக படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று கணிக்கப்பட்டது. அதன்படியே, தற்போது வெப்பத்தின் அளவும் குறைந்துள்ளது. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 106 டிகிரி அளவில் தான் வெயில் இருந்தது. வேலூர் 104 டிகிரி, திருத்தணி, நாமக்கல் 102 டிகிரி, சென்னை, பாளையங்கோட்டை, திருச்சி 100 டிகிரி வெயில் இருந்தது. பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரிக்குள் வெயில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நேற்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. மேலும், வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது. அதன் காரணமாக தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இதேநிலை 16ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பிறகு மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் பொதுவாக இயல்பைஒட்டியும் ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பநிலை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 104 டிகிரி முதல் 106 டிகிரி வரையும், இதர மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 100 டிகிரி முதல் 102 டிகிரி வரையும், தமிழக கடலோர மாவட்டங்களில் அதற்கும் கீழும் வெயில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
* தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் பல இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும் ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பநிலை இருக்கும்.
* உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 104 டிகிரி முதல் 106 டிகிரி வரையும், இதர மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 100 டிகிரி முதல் 102 டிகிரி வரையும், தமிழக கடலோர மாவட்டங்களில் அதற்கும் கீழும் வெயில் இருக்கும்.
The post 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: சில இடங்களில் வெப்பம் உயர வாய்ப்பு appeared first on Dinakaran.