×

பரக்காணி பகுதியில் தடுப்பணை பக்கவாட்டு உடைப்பை அடைக்க மண் எடுக்க கனிமவளத்துறை அனுமதி அளிக்குமா?: உப்புத்தன்மை மாறாத தாமிரபரணி ஆற்று நீர்

நித்திரவிளை: தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பரக்காணி பகுதியில் தடுப்பணை அமைக்கும் பணியின் போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதும், தடுப்பணை பணி முடிந்த பிறகு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதும், கணியன்குழி பகுதியில் உள்ள விளை நிலங்களையும் நான்கு வீடுகளையும் ஆற்றுநீர் இழுத்து சென்றது. இந்த பகுதி வழியாக கடல்நீர் ஆற்றில் புகுந்து வந்தது. இதன் காரணமாக தாமிரபரணி ஆறு உப்பாக மாறியது.

இதனால் ஆற்றில் கடல்நீர் நேரடியாக புகுவதை தடுக்கும் வகையில், தாமிரபரணி ஆற்றையொட்டி பாறாங்கல் மற்றும் கிராவல் மண் போட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஒரு நாள் கால அளவில் (24 மணி நேரம் மட்டும்) ஆயிரம் கன அடி தண்ணீர் பேச்சிப்பாறை அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதேவேளையில் பாறாங்கல் மற்றும் கிராவல் மண் போட்டு தடுப்பு ஏற்படுத்திய பிறகு முன்பு போல் அல்லாமல், பாறாங்கல் இடையே கடல்நீர் ஒரு குறிப்பிட்ட அளவு தாமிரபரணி ஆற்றில் புகுந்து வருவதால், தாமிரபரணி ஆற்றில் உப்புத்தன்மை முழுவதுமாக மாறாமலே காணப்படுகிறது .

கடல்நீர் ஆற்றில் புகுவதை தடுக்கவும், ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது சேதங்கள் ஏற்படாமல் இருக்கவும், கணியன்குழி பகுதியில் ஆற்றுநீர் இழுத்து சென்ற விளை நிலங்களை முழுவதுமாக கிராவல் மண் போட்டு நிரப்பினால் தான் நிரந்தர தீர்வு ஏற்படும் என்று கடந்த 2022ம் ஆண்டு பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  சம்பந்தப்பட்ட இடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்ட பகுதியை நிரப்ப 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் கனமீட்டர் கிராவல் மண் தேவைப்படும் என்று தமிழக அரசிற்கு அறிக்கை சமர்பித்ததன் காரணமாக, கடந்த வருடம் ஜூன் மாதம் ஆற்றுநீர் இழுத்து சென்ற பகுதியை மண் போட்டு நிரப்ப 2 கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

அதன் பின்னர் பரக்காணி பகுதியில் இருந்து எட்டு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள எட்டு குளங்களில் இருந்து வண்டல் மண்ணை எடுத்து ஆற்றுநீர் இழுத்து சென்ற பகுதியை நிரப்ப பொதுப்பணித்துறை மூலம் 3 முறை டெண்டர் விடப்பட்டது. குளத்திற்கு போக்குவரத்திற்கு சரியான பாதை இல்லை என்ற காரணத்தையும், வண்டல் மண் போட்டால் ஆற்றுநீர் மீண்டும் இழுத்து செல்லும் என்ற காரணத்தையும் சுட்டி காட்டி ஏலம் எடுக்க எந்த ஒப்பந்தக்காரர்களும் முன்வரவில்லை.

இதனால் ஆற்றுநீர் இழுத்து சென்ற பகுதியை நிரப்புவது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தாமிரபரணி ஆற்றில் உப்புநீர் புகுந்து பொதுமக்கள் மத்தியில் பிரச்னைகள் ஏற்பட்ட வேளையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசிற்கு சொந்தமான கிராவல் மண் எந்த பகுதியில் உள்ளது என்று வருவாய் துறையினர் உதவியுடன் தேடுதல் நடத்தி, கடைசியாக நட்டாலம் ‘ஏ’ கிராம பகுதியில் தேவையான கிராவல் மண் இருக்கிறது என்று கண்டறிந்தனர். தொடர்ந்து இந்த மண்ணை எடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள், குமரி மாவட்ட கனிமவளத்துறை அதிகாரியிடம் அனுமதி கோரிய போது, கனிமவளத்துறையினர் அனுமதி அளிக்காமல் இழுத்தடிப்பு செய்தனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர். அதிலும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. கனிமவளத்துறை மண் எடுத்து செல்ல அனுமதி தந்தால் மட்டுமே தமிழக அரசு ஒதுக்கீடு செய்த இரண்டு கோடியே 82 லட்சம் ரூபாய்க்கு மீண்டும் டெண்டர் போட முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
பொதுமக்களை பாதுகாக்கவும், தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கவும், தமிழக அரசு இரண்டு கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பத்து மாதங்கள் கடந்த நிலையில், அரசின் மண்ணை எடுத்து செல்ல அனுமதி அளிக்காமல் பணி துவங்க முட்டுக்கட்டை போடும் கனிமவளத்துறை மீதும், அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அதிகாரிகள் மீதும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பரக்காணி பகுதியில் தடுப்பணை பக்கவாட்டு உடைப்பை அடைக்க மண் எடுக்க கனிமவளத்துறை அனுமதி அளிக்குமா?: உப்புத்தன்மை மாறாத தாமிரபரணி ஆற்று நீர் appeared first on Dinakaran.

Tags : Department of Mineral Resources ,Parakani ,Tamiraparani ,Nithravila ,Tamiraparani river ,Kanyankuzhi ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி அருகே 3 பேர் பலியான...