காரைக்கால்: காரைக்காலில் ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.காரைக்கால் மாவட்ட பகுதி விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடித் தொழில் வர்த்தக முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாரம்பரிய மீன்பிடித் தொழிலாக இருந்தபோதே மீன் பிடித்தல், பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல், சந்தைப் படுத்துதலில் காரைக்கால் அண்டை மாநிலமான தமிழகத்தின் நாகப்பட்டினத்துக்கு ஈடாக விளங்கி வருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் வடக்கில் நண்டலாறு முதல் தெற்கில் வாஞ்சூர் வரையிலான 11 மீனவ கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 3,000க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். இக்கிராமங்களில் இருந்து சுமார் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் உள்ளனர்.மேலும் காரைக்கால் துறைமுகத்தில் மறைமுகமாக 2000 ஆயிரம் பேர் வேலை பெறுகின்றனர். காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.1,500 கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால் துறைமுகத்தில் முகத்துவாரம் தூர்வார வேண்டும் என மீனவர்கள் புதுவை அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் தூர்வாரும் பணி ரூ.3.90 கோடி செலவில் பொதுப்பணி துறையால் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது மீன்பிடி துறைமுகம் படகுகள் நிறுத்தம் பகுதி, முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரஜிங் இயந்திரங்கள் கொண்டு தூர்வாரப்பட்டு மணல் குழாய்கள் மூலம் எடுத்து துறைமுக சதுப்பு நிலங்களில் கொட்டப்படுகிறது. முகத்துவாரம் தூர்வாரும் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கூறுகையில், காரைக்கால் மீன்பிடி துறைமுக பகுதியில் முகத்துவாரம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மீன்பிடி தடை காலம் முடியும் முன்பே பணிகளை முடித்து விசைப்படகுகள் சிரமமின்றி சென்று வர பணிகளை முடிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.