×
Saravana Stores

தென்மேற்கு பருவமழை துவங்கும் முன் காட்டேரி – ஊட்டி புறநகர் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கோரிக்கை

ஊட்டி: தென்மேற்கு பருவமழை துவங்கும் முன் காட்டேரி பகுதியில் இருந்து ஊட்டிக்கு அமைக்கப்பட்டு வரும் புறநகர் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரம் முதல் தென்மேற்கு பருவமழை துவங்கும்.இந்த மழை இரண்டு மாதங்கள் முதல் நான்கு மாதங்கள் வரை நீடிக்கும்.

இச்சமயங்களில் எந்நேரமும் மழை பெய்துக் கொண்டிருக்கும் நிலையில், கட்டுமான பணிகள்,சாலை சீரமைப்பு பணிகள்,சாலை அமைக்கும் பணிகள்,பாலம் கட்டும் பணிகள் போன்றவைகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.மேலும், அங்காங்கே மழைநீர் பல்வேறு பகுதிகளிலும் ஓடிக்கொண்டே இருக்கும் நிலையில், மழை நீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுவது வாடிக்கை. மழை காலத்தின் போது ஆங்காங்கங்கே மரங்கள் விழுவது,பாறைகள் உருண்டு விழுவது, மண் சரிவுகள் போன்றவைகளும் ஏற்படும்.இதனால், எந்த ஒரு வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

இந்நிலையில், குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில், காட்டேரி சந்திப்பு பகுதியில் இருந்து ஊட்டிக்கு ரூ.45 கோடி மதிப்பில் தற்போது புறநகர் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பல இடங்களில் மழை நீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள், சாலை சீரமைப்பு மற்றும் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் கொல்லிமலை சாலை சந்திப்பு பகுதி முதல் கொல்லிமலை வரையில் சாலை அகலப்படுத்தும் பணிகள்,கொண்டை ஊசி வளைவு அமைக்கும் பணிகள் மற்றும் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, கொண்டை ஊசி வளைவு அமைக்கும் பகுதியில் பெரிய அளவிலான தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால், இச்சாலை முழுவதும் தற்போது மண் குவியல்களாக காட்சியளிக்கிறது.மேலும், கொல்லிமலை சந்திப்பு சாலை முதல்,கொல்லிமலை வரையில் சாலை சிரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை துவங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், இப்பணிகள் முடிக்கவில்லை எனில், ஜூன் மாதத்தில் பெய்யும் மழையில் இச்சாலை சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்படும்.மேலும், சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிடும். எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் தென்மேற்கு பருவமழை துவங்கும் முன் ஊட்டி – மஞ்சூர் சாலையில் கொல்லிமலை சாலை சந்திப்பு முதல் கொல்லி மலை வரை சாலை சீரமைப்பு பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post தென்மேற்கு பருவமழை துவங்கும் முன் காட்டேரி – ஊட்டி புறநகர் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Katteri – Ooty ,southwest ,Ooty ,Katteri ,southwest monsoon ,Nilgiri district ,Katteri-Ooty ,Dinakaran ,
× RELATED உருளைக்கிழங்கு பயிர் பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்