ஊட்டி: மலர் கண்காட்சியின் இரண்டாவது நாளான நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தாவரவியல் பூங்கா களைகட்டியது. சமவெளிப் பகுதிகளில் அக்னி வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மக்கள் குளு குளு சீசனை அனுபவிக்க கடந்த இரு மாதங்களாக ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.கோடை விழாவின் ஒரு பகுதியாக நடக்கும் மலர் கண்காட்சி நேற்று முன்தினம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் துவங்கியது.மலர்கண்காட்சியை காண ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இ பாஸ் முறை அமுலில் உள்ளதால், இம்முறை சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் மலர் கண்காட்சியை காண 14 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். மலர் கண்காட்சியின் 2 வது நாளான நேற்று சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகரித்து காணப்பட்டது. வாகன நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பல சாலைகளை ஒரு வழிப்பாதைகளாக மாற்றினர்.
மேலும், 44 அடி அகலம் 35 அடி உயரத்தில் டிஸ்னி வேர்ல்டு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மிக்கி மவுஸ், மின்னி மவுஸ், கூபி, புளூட்டோ, டொனலட் டக் ஆகியவை ஒரு லட்சம் ரோஜா, கார்னேசன் மற்றும் கிரைசாந்தியம் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 80 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு நீலகிரி மலை ரயில் எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், பல வகையான கார்னேசன், ரோஜாக்களை கொண்டு மலர்களால் தேனீ,முயல்,மலர் சுவர், பிரமிடு மற்றும் மலர் கொத்து போன்ற பல்வேறு மலர் அலங்காரங்கள் உருவாக்கப்படவுள்ளது.
இதுதவிர நுழைவு வாயில் பகுதியில் 10 அலங்கார வளைவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 126வது பிளவர் ஷோ போன்ற மலர் அலங்காரம் பல ஆயிரம் மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பெங்களூர்,ஒசூர் போன்ற பகுதிகளில் இருந்து கார்னேசன்,ரோஜா மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 35 ஆயிரம் தொட்டிகளை கொண்டு மாடங்களில் பல்வேறு பலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
லில்லியம் மற்றும் ஆர்கிட் மலர்களை கொண்டு பல்வேறு மலர் அலங்காரங்கள்,மலர் கோபுரங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.இதை தவிர 15 தனியார் மற்றும் அரசுத்துறை அரங்குகள் போட்டியாளர் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், ரோஜா கண்காட்சியில், 80 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு புறா,வன விலங்குகளை காக்க வேண்டும் என வலியுறுத்தி யானைகள்,புலி,வரையாடு, காட்டுமாடு மற்றும் பல்வேறு விலங்குகளின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நேற்றும் தாவரவியல் பூங்காவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
ஊட்டிக்கு வரும் வாகனங்கள் அதிகரித்த நிலையில், பூங்கா செல்லும் வாகனங்கள் அனைத்தும் சேரிங்கிராஸ், டிபிஓ., கலெக்டர் அலுவலகள் வழியாக பூங்காவிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. அதேபோல், சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் குன்னூர் சாலை சந்திப்பு பகுதியில் இருந்து மஞ்சனக்கொரை வழியாக ஊட்டிக்கு இயக்கப்பட்டது. மேலும், கேரள மாநிலங்களில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் கால்ப் லிங்ஸ் பகுதியில் நிறுத்தப்பட்டன.அங்கிருந்து சர்க்கீயூட் மற்றும் பார்க் அன்ட் ரெய்டு பஸ்கள் மூலம் சுற்றுலா பயணிகள் ஊட்டி நகருக்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், ஊட்டி நகரில் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் காணப்பட்டது.
The post 2வது நாளான நேற்றும் மலர் கண்காட்சியை காண மக்கள் கூட்டம் அலைமோதியது appeared first on Dinakaran.