×

பீர் வாங்கி கொடுக்காததால் ஆத்திரம் எல்ஐசி ஊழியரை தாக்கிய 5 பேர் கைது

கோவை: கோவை அருகே உள்ள பூசாரி பாளையம் பட்டப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (27). இவர் எல்.ஐ.சி ஊழியராக வேலை செய்து வருகிறார். இரவு கோபிநாத் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றார். அப்போது அதே பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேர் அவரை டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கி வரும்படி கூறியுள்ளனர். அப்போது அவர்கள் 3 பேரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கோபிநாத் மறுத்து விட்டார்.

ஆத்திரமடைந்த 3 பேரும் இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கினர். மேலும், அவரை கீழே தள்ளி விட்டு தாக்கியுள்ளனர். கோபிநாத் இதில் காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்நிலையில், கோபிநாத்தை தாக்கிய நபர்கள் அவரது வீட்டிற்கு சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். இது குறித்து கோபிநாத் செல்வபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கோபிநாத்தை அடித்து உதைத்து தாக்கி வீட்டை சேதப்படுத்தியதாக பூசாரி பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (35), ஆனந்த் (31), கௌதம் (36) ஆகியோரை கைது செய்தனர்.

செல்வபுரம் அருகே அசோக் நகர் ரவுண்டானா அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கே ராமநாதபுரம் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (34) என்பவர் கேசியராக பணியாற்றி வருகிறார். இவர் இரவில் பார் மூடி விட்டு கடை சுத்தம் செய்யும் பணி செய்தார். அப்போது அங்கே 3 பேர் வந்து அவரிடம் மது பாட்டில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுத்துள்ளார்.

ஆத்திரமடைந்த அவர்கள் மகேந்திரனை கத்தி காட்டி மிரட்டி பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து மகேந்திரன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் என்ற தீனா (26) ஐயூடிபி காலனி பகுதியைச் சேர்ந்த விஜய் (24) ஆகியோரை கைது செய்தனர். தினேஷ் என்ற பூச்சி தினேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

 

The post பீர் வாங்கி கொடுக்காததால் ஆத்திரம் எல்ஐசி ஊழியரை தாக்கிய 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : LIC ,Coimbatore ,Gopinath ,Pusari Palayam Pattappan Street ,Gopinath Mariamman ,Dinakaran ,
× RELATED கோவை அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றும் பணி