மதுரை: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், தொடர் மழையாலும் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யானைக்கல் தரைப்பாலத்தை மூழ்கியபடி மழைநீர் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் மூன்றாவது பூர்வீக பாசன தேவைக்கென வைகை அணையிருந்து நேற்று முன்தினம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரால், மதுரை நகரில் வைகையாற்று பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வரும் மே 14ம் தேதி வரை மொத்தம் 915 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. வைகை அணையின் 7 சிறிய மதகுகள் வழியாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை, தேனி மாவட்டங்களின் வைகையாற்று பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையாலும் ஆற்றுக்குள் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது.
எனவே, ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிப்பவர்களுக்கு எம்எம்எஸ் மூலமும் எச்சரிக்கை தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க கூடாது எனவும், குளிக்கவும், துணி துவைக்கவும், கால்நடைகளை ஆற்றிற்குள் இறங்கவும் அனுமதி மறுத்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிப்பால் யானைக்கல் தரைப்பாலம் மூழ்கியதால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
The post அணையில் தண்ணீர் திறப்பால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.