×

திருச்சி ஜிஹெச்சில் கொடூர சம்பவம்: மூதாட்டி சடலத்தில் நகை திருடிய ஒப்பந்த தொழிலாளி கைது

திருச்சி, மே 12: திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து போன மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் தோடுகளை திருடிய ஒப்பந்த தொழிலாளியை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி புத்துார் கல்லாங்காட்டை சேர்ந்தவர் சந்திரா (70). முதுமை காரணமாக மோசமான உடல்நிலையில் இருந்த சந்திராவை உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் இறந்தார். இந்நிலையில் அவரது உறவினர்கள் சந்திராவின் உடலை மருத்துவமனை வார்டு கட்டிலில் கிடத்தி, போர்வையால் போர்த்திவிட்டு, உடலை வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்வதற்காக வௌியில் சென்றனர்.

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து விட்டு மீண்டும் வார்டுக்கு வந்தவர்கள், உடலை அப்புறப்படுத்துவதற்காக துாக்கிய போது, மூதாட்டியின் காதில் இருந்து ரத்தம் வழிந்திருப்பதை கண்டனர். சந்தேகம் அடைந்தவர்கள் போர்வையை விலக்கி பார்த்த போது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின் மற்றும் காதில் இருந்த ஒரு பவுன் தோடு ஆகியவை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடன் இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார், மருத்துவமனை சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அதே மருத்துவமனையில் பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்த துாய்மை பணியாளரான ஆர்ச்சம்பட்டியை சேர்ந்த மோகன் (40), நகைகளை திருடியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post திருச்சி ஜிஹெச்சில் கொடூர சம்பவம்: மூதாட்டி சடலத்தில் நகை திருடிய ஒப்பந்த தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Trichy GH ,Trichy ,Trichy Government Hospital ,Chandra ,Tiruchi Puthar ,Kallangat.… ,Tiruchi GH ,
× RELATED சிறையில் திருநங்கைக்கு பாலியல்...